யாழில் ஒன்றுகூடிய தமிழ்த் தேசியக் கட்சிகள்! நாளை ஒப்பந்தம் கைச்சாத்து (Video)
தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் எந்தவிதமான இணக்கப்பாடுகளும் இன்றி நிறைவடைந்துள்ளது.
யாழில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் இந்த கலந்துரையாடல் இன்று மாலை 4.30 மணியளில் ஆரம்பமாகி நடைபெற்றிருந்தது.
எனினும் இதன்போது எந்த இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாளையதினம் நடைபெறவுள்ள கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக ஆராயப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கூட்டணிக்கான ஒப்பந்தமும் நாளையதினம் கைச்சாத்திடப்படுமெனறும் இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன், க.சர்வேஸ்வரன், குருசாமி சுரேந்திரன், விந்தன் கனகரட்ணம், சபா.குகதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டதுடன் உள்ளூராட்சிமன்றங்களின் பிரதிநிதிகள் அடங்கிய 25 பேர் வரையானோர் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ச்சியாக ஓரணியாகச் செயற்பட்டு வந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் ஐந்தும் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒற்றுமையாக - கூட்டணியாக எதிர்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் நாளை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்படவுள்ளது என்று அறியமுடிகின்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை தனித்துச் சந்திக்கவுள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, ரெலோவின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரத்தின் கொழும்பு இல்லத்தில் கட்சித் தலைவர்கள் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தியுள்ளனர்.
இந்தச் சந்திப்பில் புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். கடந்த காலங்களில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைசார் விடயங்களில் இந்த ஐந்து தரப்புக்களுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் பணியாற்றியிருந்தது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பு விவகாரம், இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பும் விடயம் எனப் பல்வேறு விடயங்களில் ஒருமித்துச் செயற்பட்டிருந்தன.
இந்தக் கூட்டிலிருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வெளியேறியுள்ளதால், ஏனைய 5 கட்சிகளும் ஒன்றிணைந்து - ஒரு குடையின் கீழ் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்ளத் தீர்மானித்துள்ளன.
எந்தக் கட்சி, சின்னம் என்பன தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தவிசாளருடன் 5
கட்சியினரும் கலந்துரையாடி முடிவு எடுக்கவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காகத் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஏற்படுத்திக் கொண்டுள்ள புதிய கூட்டணியில் ஜனநாயகப் போராளிகள் கட்சியும் இணைந்துள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டமைப்பில் இருந்து விலகி தனியாகப் போட்டியிடுவது என்ற தீர்மானத்தைக் கட்சிகள் எடுத்துள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கியிருந்தன.
ஜனநாயகப் போராளிகள் கட்சி
அந்தக் கூட்டணியில் தமிழ் மக்கள் கூட்டணி, புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கட்சி என்பன ஏற்கனவே இணைந்திருக்கும் நிலையில், தற்போது ஜனநாயகப் போராளிகள் கட்சியும் அதில் இணைந்து கொண்டுள்ளது.
தமிழ் மக்களுக்காக ஆயுதப் போராட்டங்களை மேற்கொண்ட அனைத்துத் தரப்புகளும் இந்தக் கூட்டணியில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் நாளை (13.01.2022) வெள்ளிக்கிழமை ஒன்றுகூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயவுள்ளனர்.
கூட்டணியின் சின்னம், பெயர் அறிவிப்பு
மறுநாள் சனிக்கிழமை ஊடக சந்திப்பின் மூலம் கூட்டணியின் சின்னம், பெயர் என்பன தொடர்பில் அறிவிக்கப்படும்.
இந்தக் கூட்டணி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போட்டியிடும். கூட்டணியின்
சின்னம் கட்சியொன்றினுடையதாகவோ அல்லது புதியதாகவோ இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
