உள்ளூராட்சிமன்ற தேர்தல்: வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைள் நாளை (6) காலை இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம்
அந்தவகையில், யாழ்ப்பாணம் மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் இன்று காலை எடுத்து செல்லப்பட்டுள்ன.
இன்று காலை 8 மணியளவில் வாக்குப் பெட்டிகளை அனுப்பும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபனால் குறித்த நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களில் , 517 வாக்களிப்பு நிலையங்களுக்கு 672 வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
அத்தோடு, நெடுந்தீவுக்கான வாக்கு பெட்டிகள் கடற்படையின் உதவியுடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் மாவட்ட செயலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இன்று (05.05.2025) காலை 7.30 மணி முதல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் அரசாங்க அதிபருமான , அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எஸ்.சிந்துசாவின் ஏற்பாட்டில் வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய் , மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கான தேர்தலாக இது அமைவதுடன் 41 வட்டாரங்களை உள்ளடக்கி காணப்படுகின்றது.
குறித்த தேர்தலில் 1291 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 274 பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி
வாக்களிப்பு நிலையங்களுக்கு முதலாம் கட்ட வாக்குப் பெட்டிகளுடன் பேருந்துக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
நாளைய தினம் (06.05.2025) நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் முழங்காவில் வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்லும் முதலாவது பேருந்து இன்றைய தினம் (05.05.2025) காலை 08.30 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.S.முரளிதரன் அவர்களும், உதவித் தேர்தல் ஆணையாளர் திரு.வே. சிவராசா அவர்களும் இணைந்து அனுப்பிவைத்தனர்.
தொடர்ச்சியாக ஏனைய வாக்களிப்பு நிலையங்களுக்கான பேரூந்துகளை அனுப்பும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
திருகோணமலை
நாளை (06) நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம் பெறவுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் தேர்தல் மத்திய நிலையமான திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் இருந்து வாக்குப்பெட்டிகளை உரிய இடங்களுக்கு அனுப்புவதற்கான வேலைப்பாடுகள் இன்று (05) நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
திருகோணமலை தி. விபுலானந்தா கல்லூரியிலிருந்து வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
பாதுகாப்பு கடமைகளில் பொலிஸார் மற்றும் அதிரடி படைகள் ஈடுபட்டதை அவதானிக்க முடிகின்றது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் தேர்தல் மத்தியஸ்தான இந்து கல்லூரியில் இருந்து வாக்கு சாவடிகளுக்கு வாக்கு பெட்டிகள் வாக்குசீட்டுக்கள் இன்று திங்கட்கிழமை (05) காலை 9.00 எடுத்துச் செல்லும் நடவடிக்கையினை; மாவட்ட உதவி தேர்தர் ஆணையாளர் எம்.பி. எம். சுபியான் மற்றும் தெருவத்தாட்சியும் அரசாங்க அதிபர் முரளீதரன் தலைமையில் ஆரம்பித்து வைத்தார்.
மாவட்டத்தில் 2 நகரசபை, 1 மாநகரசபை, 9 பிரதேச சபை உட்பட 12 உள்ளுராட்சி மன்றங்களில் உள்ள 144 வட்டாரங்களில் இருந்து 146 பேர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் போனஸ் ஆசனம் உட்பட மொத்தமாக 274 பேர் தெரிவுக்காக தேர்தலில் 11 அரசியல் கட்சிகள் சுயேச்சைக்குழுக்கள் உட்பட 101 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதுடன் 4 இலச்சத்து 55 ஆயிரத்து 520 வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் 444 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
இந்த தேர்தலையடுத்து மாவட்டத்தில் நகர் மற்றும் முக்கிய சந்திகளில் பாதுகாப்பு படையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றதுடன் இதுவரை 353 தேர்தல் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இதில் 90 வீதமான முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதாக மாவட்ட உதவி தேர்தர் ஆணையாளர் எம்.பி. எம். சுபியான் தெரிவித்தார்.
வவுனியா
வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று (05.05) அனுப்பி வைக்கப்பட்டது.
நாளை (06.05) இடம்பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் வவுனியா மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 154 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகள், வாக்குச் சீட்டுக்கள் மற்றும் ஏனைய தேவையான ஆவணங்கள் வவுனியா மாவட்டச் செயலகத்தில் இருந்து காலை முதல் அனுப்பி வைக்கப்பட்டது.
பொலிஸாரின் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் உள்ள 05 உள்ளூராட்சி சபைகளுக்குமான வாக்குப் பெட்டிகள் இன்று திங்கட்கிழமை (5) காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபை,மன்னார்,மாந்தை மேற்கு,நானாட்டான் ,முசலி ஆகிய பிரதேச சபைகள் உள்ளடங்களாக 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்குப் பெட்டிகள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் வைபவ ரீதியாக இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 114 வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (5) காலை 11 மணி முதல் மாவட்டச் செயலகத்தில் இருந்து வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் ஐந்து சபைகளில் 103 சபை உறுப்பினர்களை தெரிவு செய்ய 114 வாக்களிப்பு நிலைகளில் 91 ஆயிரத்து 373 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா
நாளை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் 300 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 610,117 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா மாநகர சபை, தலவாக்கலை லிந்துலை மற்றும், அட்டன், டிக்கோயா ஆகிய நகர சபைகளுக்கும், வலப்பனை, ஹங்குரன்கெத்த, நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை மற்றும் கொட்டகலை, அக்கரபத்தனை, நோர்வூட், மஸ்கெலியா ஆகிய பிரதேச சபைகளுக்குமான 540 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
வாக்களிப்பு நிலையங்களில் 6352 பேர் கடமையாற்றவுள்ளதோடு, பாதுகாப்புக்காக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸாருமாக 1500 பேர் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
12 சபைகளுக்கும், 300 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 2485 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
பதுளை
நாளை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு பதுளை மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பதுளை மத்திய கல்லூரி மற்றும் தர்மதூத கல்லூரியிலிருந்து வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
பதுளை மாவட்டத்தில் 18 சபைகளுக்கும், அங்கீகரிக்கப்பட்ட 14 கட்சிகள் மற்றும் 11 சுயேட்சைக் குழுக்களுமாக வேட்பாளர்கள் போட்டியிடுவதோடு, 576 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
அம்பாறை
இலங்கையின் 2025 ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்ற தேர்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில் தேர்தலுக்காக அம்பாறை மாவட்ட தேர்தல் மத்திய நிலையமான அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப வளாகத்தில் இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று ஆரம்பமானது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக 19 உள்ளுராட்சி மன்றங்களுக்காக 4,78000 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
உள்ளுராட்சிமன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 19 உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக 458 வாக்களிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில் 202 இடங்களில் வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களாகும்.இவ்வாறு உரிய இடங்களில் எண்ணப்பட்டு அப்பகுதிக்கு பொறுப்பான உதவி தெரிவத்தாட்சி அலுவலகருக்கு தெரிவிக்கப்படும்.
பின்னர் உள்ளுராட்சி மன்றத்திற்கு தெரிவான பிரதிநிதிகள் குறித்து உதவி தெரிவத்தாட்சி அலுவலகர் அறிவிப்பார்.
தொடர்ந்து வாக்குகள் உள்ளிட்ட சகல ஆவணங்களும் மத்திய நிலையமான அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப வளாகத்திற்கு எடுத்து வரப்படும்.
பின்னர் உத்தியோகபூர்வமாக உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவான பிரதிநிதிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்படும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |













காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 16 மணி நேரம் முன்

பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, ரூட்டை மாற்றிய பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன்... வைரலாகும் வீடியோ Cineulagam

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam
