தொடருந்துகளின் வேகத்தை அதிகரிக்க இந்தியாவிடம் கடன்
தொடருந்து பாதை கட்டமைப்பை மீண்டும் புனரமைப்பதற்காக இந்திய கடன் திட்டத்தை பெற எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை கூறியுள்ளார்.
10 முதல் 40 ஆண்டுகள் பழமையான தண்டவாளங்கள்
தொடருந்துகளின் வேக கட்டுப்பாடு 20 முதல் 30 இருக்கின்றது.10,20,30 முதல் 40 ஆண்டுகள் பழமையான தண்டவாளங்களே இருக்கின்றன. தொடருந்துகள் தடம் புரள்கின்றன.விபத்துக்கள் ஏற்படுகின்றன.
சரியான நேரத்திற்கு தொடருந்துகளை இயக்க முடியாத நிலைமையேற்பட்டுள்ளது. அவற்றை புனரமைக்க இந்திய கடன் திட்டத்தை பெற எதிர்பார்த்துள்ளோம்.
அதேபோல் தனியார் முதலீட்டாளர்களுக்கு வருமானம் வழியை பெற்றுக்கொள்வதற்காக வணிக முறை ஒன்றை பயன்படுத்தவும் எதிர்பார்த்துள்ளோம்.
வருமானம் கிடைத்தாலும் அது எரிபொருளுக்கு செலவாகி விடுகிறது
கடந்த காலங்களில் தொடருந்து திணைக்களம் வருடாந்தம் 10 பில்லியன் நஷ்டத்தை எதிர்நோக்கியது.
இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக தற்போது மாதாந்தம் ஒரு பில்லியன் ரூபாவுக்கும் மேல் வருமானம் கிடைத்து வருகிறது. எனினும் அந்த வருவாயில் எரிபொருளுக்கான செலவுகளை மட்டுமே ஈடுசெய்ய முடிந்துள்ளது எனவும் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.