மூடப்படும் மதுபான நிலையங்கள்: வெளியான அறிவிப்பு
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, வடக்கு மாகாணம் மற்றும் நுவரெலியா மாவட்டம் முழுவதும் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் நாளை(08.11.2026) மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை மற்றும் ரிதீமாலியத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைத் தவிர, ஏனைய அனைத்துப் பிரதேச செயலகப் பிரிவுகளிலும் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் நாளை மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
மேற்குறிப்பிடப்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடும் அல்லது அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேலும், இந்த உத்தரவுகளை மீறிச் செயற்படுபவர்கள் குறித்துத் தகவல் தெரிந்தால், 1913 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை மேற்கொண்டு அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தீபாவளித் திருநாளை முன்னிட்டு நாளை (08.11.2026) ஞாயிற்றுக்கிழமை வடக்கு மாகாணத்திலுள்ள உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைவாக மதுவரித் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
வடக்கு மாகாணத்திலுள்ள இந்து அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்கள், தீபாவளி தினத்தன்று மாகாணம் முழுவதும் மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
கோரிக்கை
இக்கோரிக்கையைத் தொடர்ந்து, வடக்கு மாகாண ஆளுநர் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எழுத்துமூலம் கடிதம் அனுப்பி, தீபாவளியன்று வடக்கு மாகாணத்திலுள்ள மதுபானசாலைகள் மற்றும் மதுபானச் சில்லறை விற்பனை நிலையங்களைத் தற்காலிகமாக மூடுவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களையும் உத்தரவுகளையும் வழங்குமாறு கோரியிருந்தார்.
ஆளுநரின் கோரிக்கையைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைவாக மதுவரித் திணைக்கள ஆணையாளர் (06.11.2026) திகதியிட்ட கடிதத்தின் மூலம் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டச் செயலாளர்களுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

அதன்படி, சுற்றுலா சபையின் அங்கீகாரம் பெற்ற மற்றும் விசேட நட்சத்திர உணவக உரிமம் பெற்ற நிலையங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களையும் 08.11.2026 அன்று மூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்து அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, தீபாவளி தினத்தில் மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்த ஜனாதிபதி மற்றும் மதுவரித் திணைக்களத்துக்கு ஆளுநர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்- தீபன்
Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி Manithan
தேர்தல் பின்னடைவு ஒரு பக்கம்... விற்பனை இல்லாமல் Cybertruck உற்பத்தியை நிறுத்தும் எலான் மஸ்க் News Lankasri