கடற்றொழில் அமைச்சரின் கபடத்தனத்திற்கு இடமளிக்க மாட்டோம்: எழுந்தது கண்டனம்
கடற்றொழில் அமைச்சர் கபடத்தனமாக எமது பொன்னாவெளி கிராமத்தில் சுண்ணக்கல் அகழ எத்தனித்து வருகிறார். அதற்கு நாம் இடமளிக்க முடியாது என அனைத்து மக்கள் ஒன்றிய உறுப்பினர் வி.சிறிபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வெள்ளாவெளி மக்கள் நீண்ட காலமாக சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனையும் மீறி கடற்றொழில் அமைச்சர் தனியார் நிறுவனத்திற்கு சுண்ணக்கல் அகழ்வுக்கு அனுமதி வழங்கியுள்ள்ளார்.
சுண்ணக்கல் அகழ்வு
எமது பிரதேசம் தாழ்நில பிரதேசம். கடலுக்கும் எமது நிலத்திற்கும் மூன்றடி இடைவெளியே உண்டு. அங்கு சுண்ணக்கல் அகழ்வில் ஈடுபட்டால் கடல் நீர் உட்புகுந்து எமது கிராமமே கடலில் மூழ்கிவிடும்.
எமது போராட்டக்காரர்கள் மது போதையில் நின்றார்கள் என்றும், 150க்கும் குறைவானவர்களே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என அமைச்சர் தரப்பு கூறுவது முற்றிலும் பொய்.
யார் மது போதையில் அங்கு வந்தார்கள் என அங்கிருந்தவர்களுக்கு தெரியும். அவர்களின் விபரங்களையும் வெளியிட தயாராக இருக்கிறோம்.
பொன்னாவெளியில் மக்கள் இல்லை என கூறுகின்றார்கள்.
அந்த மக்களை அங்கிருந்து துரத்தியடித்ததே இவர்கள் தான். டோக்கியோ சீமெந்து தொழிற்சாலைக்கு நிலங்களை வழங்கிய போது , அவர்கள் அங்கு ஆழ் துளை கிணறுகளை அடித்த போதே அப்பகுதியில் நிலத்தடி நீர் உவரானது.
அதனாலேயே மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது." என்றார்.
அமைச்சருக்கு எதிரான போராட்டம்
பொன்னாவெளியில் சுண்ணக்கல் அகழ்வால் எந்த பாதிப்பும் இல்லை என ஏன் இதுவரை யாரும் ஆய்வு செய்து விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கவில்லை என கிராம சக்தி மக்கள் சங்க தலைவர் செல்லப்பா குழந்தை வேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“பொன்னாவெளி பகுதியில் சுண்ணக்கல் அகழ்வை தடை செய்ய வேண்டும் என வடமாகாண ஆளுநர் , மாவட்ட செயலர்கள் ,பிரதேச செயலர்கள் , அமைச்சர் என 25 தரப்பினருக்கு 2 ஆயிரத்து 500 பேரின் கையொப்பங்களுடன் மனுக்களை கையளித்துள்ளோம்.
இதுவரையில் எவரும் அதனை தடை செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அதனால் தான் நாம் தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கிறோம்.
இது அமைச்சருக்கு எதிரான போராட்டம் அல்ல. எமது வாழ்வுக்கான போராட்டம். எமது நிலத்தை அகழும் போது கடலில் எமது கிராமம் மூழ்கும் அபாயம் உண்டு. எமது பகுதியில் 700 ஏக்கர் நிலத்தை 100 அடி ஆழத்திற்கு அகழ உள்ளனர்.
அதனால் பாரிய பள்ளங்கள் ஏற்பட்டு , அவற்றினுள் கடல் நீர் உட்புகும். அந்த நீர் பின்னர் சுண்ணாம்பு பாறைகள் ஊடாக நிலத்தடி நீரில் கலந்து அயல் கிராமங்களின் நன்னீரும் உவர் நீராகும்.
இன்று வரை சுண்ணக்கல் அகழ்வினால் ஏற்படும் சாதக பாதக தன்மைகள் தொடர்பில் எந்த ஆய்வுகளையும் மேற்கொள்ளவில்லை. பொன்னாவெளியை சூழவுள்ள கிராஞ்சி , வலைப்பாடு வேராவில் , பாலாவி போன்ற ஏனைய கிராமங்களுக்கு பாதிப்பு இல்லை என விஞ்ஞான பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டு , அறிவிக்க முடியுமா ? இதுவரையில் எதற்காக சுண்ணக்கல் அகழ்வினால் ஏற்படும் சாதக பாதகம் தொடர்பில் எந்தவொரு ஆய்வையும் மேற்கொள்ள இவர்கள் தயாராக இல்லை? என அவர், கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களின் கோரிக்கை
தங்கள் நிலத்தை காக்க போராடும் பொன்னாவெளி மக்களுக்கு ஆதரவாக என்றும் தேசிய மக்கள் சக்தி ஆதரவாக நிற்கும் என அக்கட்சியின் யாழ்,மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தங்கள் நிலத்தை காக்கவே அந்த பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்னொமொரு அத்திப்பட்டியை உருவாக்க முயல்கின்றாரா என்ற கேள்வியே எம் மத்தியில் உள்ளது.
பொன்னாவெளி மக்களின் போராட்டம் கட்சி சார்ந்த போராட்டம் அல்ல. அவர்களின் நிலம் சார்ந்த போராட்டம். போராட்டத்தின் பின்னால் அரசியல் கட்சிகள் உள்ளதாக கடற்தொழில் அமைச்சர் கூறியது தவறானது.
அனைத்து கட்சிகளும் அந்த மக்களின் கோரிக்கை சரியானது என்பதால் அவர்களுக்கு ஆதரவாக நிற்கின்றார்கள். மக்களின் நியாமான கோரிக்கைக்கு தீர்வு காண முனையாமல் , தமிழ் திரைப்படம் ஒன்றில் அத்திப்பட்டி என்ற கிராமம் அழிக்கப்பட்டது போன்று இந்த கிராமத்தையும் அழிக்க முயல்கின்றார்களா என நியாமான சந்தேகம் எமக்கு உண்டு.
அன்று களப்பணிக்கு போனதாக கடற்தொழில் அமைச்சர் தெரிவிக்கின்றார். அதற்கு எதற்காக பேருந்துக்களில் 500 பேருக்கும் மேற்பட்டவர்களை அழைத்து செல்ல வேண்டும் ?
அதனால் அவர் களப்பணிக்கு சென்றாரா ? கள்ள பணிக்கு சென்றாரா ? என்ற சந்தேகம் எமக்கு உண்டு. பொன்னாவெளி மக்களின் கோரிக்கை நியாயமானது. அதனால் அவர்களுக்கு ஆதரவாக தேசிய மக்கள் சக்தி என்றுமே ஆதரவாக நிற்கும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |