டெல்டா மட்டக்களப்பில் இருப்பதற்கான சாத்தியம் அதிகம் - வைத்தியர் நாகலிங்கம் மயூரன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெல்டா வேரியன் இதுவரையில் உத்தியோகப்பூர்வமான கண்டுபிடிக்கப்படவில்லை என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் தொற்று முறையினையும் மரண எண்ணிக்கையினையும் பார்க்கும் போது டெல்டா வேரியன் மட்டக்களப்பில் இருப்பதற்கான சாத்தியம் அதிகளவில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோவிட் நிலைமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 303 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மூன்று பேர் மரணமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 106 பேரும், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 38 பேரும், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 27 பேரும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 பேரும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேரும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேருமாக 303 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
கோறளைப்பற்று மத்தி, செங்கலடி, பட்டிப்பளை ஆகிய பகுதிகளில் மரணங்கள் ஏற்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 152 கோவிட் மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
மூன்றாவது அலையில் 143 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. 20 வயதுக்குட்பட்டவர்கள் எவரும் மரணமடையவில்லை. 20 - 50 வயதுக்குட்பட்டவர்கள் 15 பேரும், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் 137 பேர் உயிரிழந்துள்ளனர்.
மரணமடைந்தவர்களில் 54 வீதமானவர்கள் ஆண்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் 651 கட்டில்கள் இடைத்தங்கல் முகாம்களில் தயார் நிலையில் உள்ளன.
சிகிச்சை நிலையங்களில் 116 கட்டில்கள் தயார் நிலையில் உள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 124 கட்டில்கள் உள்ளன. தற்போது வரையில் எந்தவித ஒட்சிசன் தட்டுப்பாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இல்லை.
அவசர சிகிச்சைப் பிரிவு வசதிகளைப் பொறுத்தவரையில் காத்தான்குடி வைத்தியசாலையில் 6 கட்டில்களும், களுவாஞ்சிகுடி, வாழைச்சேனை வைத்தியசாலைகளில் 14 கட்டில்களுடன் அவசர சிகிச்சைப் பிரிவு உருவாக்கவுள்ளோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் சிறுசிறு கொத்தணிகள் உருவாகுவதற்கு ஒன்றுகூடல்களே காரணமாகவிருந்தன. மரண வீடுகள், கோவில்களுக்குச் சென்றுவந்தவர்கள், திருமண வீடுகளுக்குச் சென்றுவந்தவர்கள்.
எனவே ஒன்றுகூடல்களை முற்றாகத் தவிருங்கள். ஒன்றுகூடுவதை முற்றாகத் தவிர்ப்பதன் மூலமே மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்றுநோயைக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர முடியும்.
மிகவும் தேவையிருந்தால் மட்டுமே வீட்டினை விட்டு வெளியில் செல்லுங்கள், சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுங்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்றுக்குள்ளானவர்களை வீட்டில் வைத்து பராமரிக்கும் முறையும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
வீட்டில் வைத்து பராமரிக்கப்படுபவர்கள் 2 வயதுக்கு மேற்பட்டவர்கள், 60 வயதுக்குட்பட்டவர்கள், குணம் குறியற்றவர்கள், வேறு நோயற்றவர்கள், வீடு காற்றோட்டமுள்ள வீடாக இருக்கவேண்டும். நோயாளிக்குத் தனியான அறை மற்றும் தனியான குளியலறை காணப்பட வேண்டும்.
இவ்வாறானவர்களை மட்டுமே வீட்டில் வைத்து பராமரிக்க முடியும். மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சிலர் வெளியில் வர்த்தக நிலையங்களுக்கு சென்றுவரும் நிலை அவதானிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
தொற்றுக்குள்ளானவர்கள், தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடி தொடர்புகளை கொண்டுள்ளவர்கள் வீட்டினை விட்டு வெளியில் வர வேண்டாம்.
அவ்வாறு யாரும் வெளியில் வந்தால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அவர்களுக்குச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தடுப்பூசிகளை பொறுத்தவரையில் 266000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. 30 வயதுக்கு மேற்பட்ட 91 வீதமானவர்களுக்கு கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டத்தில் 61800 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இது 30 வயதுக்கு மேற்பட்ட 21 வீதமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இன்னும் 50 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்குமானால் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கல் பூர்த்தியடையும். மட்டக்களப்பு மாவட்டத்தில் டெல்டா வேரியன் இதுவரையில் உத்தியோகப்பூர்வமான கண்டுபிடிக்கப்படவில்லை.
இருந்தாலும் தொற்று முறையினையும் மரண எண்ணிக்கையினையும் பார்க்கும்போது டெல்டா வேரியன் மட்டக்களப்பில் இருப்பதற்கான சாத்தியம் அதிகளவில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
