இலங்கைக்கு கிடைக்கவிருந்த இலகு ரக ரயில்வே கட்டமைப்பை இல்லாமல் ஆக்கினர்-சம்பிக்க ரணவக்க
பங்களாதேஷின் டாக்கா நகரில் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட போது போன்ற இலகு ரக ரயில் சேவை கட்டமைப்பு அடுத்த வருடம் இலங்கைக்கும் கிடைக்கவிருந்ததாகவும் முட்டாள்த்தனமாக செயல்பட்ட அதிகாரிகள் மற்றும் படித்தவர்கள் எனக் கூறிக்கொண்ட சிலர் இணைந்து கோட்டாபய ராஜபக்சவை பயன்படுத்தி அதனை கிடைக்காமல் செய்து விட்டனர் எனவும் 43 வது படையணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
8 பில்லியன் டொலர் முதலீடு கிடைத்திருந்தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது
இதன் மூலம் இழக்கப்பட்ட முதலீட்டு தொகை சுமார் 8 பில்லியன் டொலர்கள். மூன்று வருட காலத்திற்குள் அந்த பணம் கிடைத்திருந்தால், தற்போதைய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது.
கொழும்பு நகருக்கு வெளியில் நான்கு இலகு ரக ரயில் சேவை கட்டமைப்புகளும், மருதானையில் இருந்து ஹோமாகமை வரை நவீன ரயில் திட்டம் என்பவற்றை நான் பெருநகர மற்றும் மேல் மாகாண அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஆரம்பித்தேன். எனினும் முட்டாள்த்தனமான வாத விவாதங்களுக்கு மத்தியில் கடந்த 2020 ஆம் ஆண்டு அவை நிறுத்தப்பட்டன.
கடுவலையில் இருந்து மொறட்டுவை, மொறட்டுவை, பிலியந்தலை,கிருளப்பனை ஊடாக மருதானைக்கும், ராகம, கடவத்தை, களனி, அங்கொடை ஊடாக கோட்டைக்கும், கொட்டாவை ஊடக பத்தரமுல்லை உள்ளடங்கும் வகையில் இந்த இலகு ரக ரயில் சேவையை உருவாக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இதில் மாலபேவில் இருந்து கோட்டை வரையான முதலாவது நிர்மாணிப்புக்கு ஜப்பான் 0.1 வீத வட்டியில் 12 ஆண்டுகளில் செலுத்தும் காலத்துடன் மேலும் 40 ஆண்டுகளில் கடனை செலுத்தும் வகையில் கடனை வழங்கியது.
பிரான்ஸிடம் இருந்து கிடைத்த இலவச முதலீடு
அத்துடன் பத்தரமுல்லை, கொழும்பு கோட்டை ஆகிய இடங்களில் மிகப் பெரிய போக்குவரத்து தலைமையிடங்களை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு பிரான்ஸ் அரசாங்கத்திடம் இருந்து இலவசமாக முதலீடு கிடைத்தது.
இப்படியான பல வளர்ச்சித்திட்டங்கள் நிறுத்தப்பட்டமை மிக மோசமான அநியாயம். சௌபாக்கிய வழி எனக்கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் நாட்டுக்கு பல இழப்புகளை ஏற்படுத்தினர்.
எதிர்காலத்தில் ஒரளவுக்கு ஸ்திரத்தன்மை ஏற்பட்டால் மாத்திரம் இவற்றை மீண்டும் நடைமுறைப்படுத்த முடியும். இந்த திட்டங்களுக்காக பலத்தையும் அர்ப்பணிப்புகளையும் வழங்கிய தொழில் நிபுணர்கள் அனைவரும் தற்போது நாட்டை விட்டு வெளியேறி விட்டனர் என்பதை வருத்தத்துடன் கூற வேண்டியுள்ளது எனவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.