ஈரான் மீதான தடைகள் நீக்கம் - இன்றுடன் நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகள்
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகளும், அவர்களுக்கு இடையேயான சமரச பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் மத்தியஸ்தக் குழுக்களும் இன்று(21.06.2026) சுவிட்சர்லாந்தில் சந்திக்கவுள்ளனர்.
அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான அமெரிக்கப் பிரதிநிதிகள் குழுவும், நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாஃப் தலைமையிலான ஈரானிய பிரதிநிதிகள் குழுவும், இவர்களுடன் பாகிஸ்தான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மத்தியஸ்தக் குழுக்களும் தற்போது சுவிட்சர்லாந்தின் பர்கென்ஸ்டாக் நகரை வந்தடைந்துள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இன்று(21) காலை தொடங்கும் என்று சுவிட்சர்லாந்து வெளியுறவு அமைச்சு தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இன்றுடன் நடைமுறைக்கு வரும் நடைமுறைகள்
இந்தச் சந்திப்பில் லெபனான் உட்பட அனைத்து முன்னணிகளிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்துவதாக ஈரானும் அமெரிக்காவும் பிரகடனப்படுத்தியுள்ளதுடன், ஒருவருக்கொருவர் எதிராகப் போர் அல்லது இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க மாட்டோம் என்றும் உறுதியளித்துள்ளன.

இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டவுடன், அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை நீக்கத் தொடங்குவதுடன் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளையும் முழுமையாக முடிவுக்குக் கொண்டு வரும்.
அதற்குப் பதிலாக, ஈரான் அடுத்த 60 நாட்களுக்கு மட்டும் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்கு எந்தவிதக் கட்டணமும் இன்றி சிறப்பு ஏற்பாடுகளைச் செய்யும்.
மேலும், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது முதல் பொருளாதாரத் தடைகள் முழுமையாக நீக்கப்படும் வரை, ஈரானின் மசகு எண்ணெய், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் அதன் வழிப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான சிறப்புத் தளர்வுகளை அமெரிக்கா வழங்கும்.

அத்துடன், முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் நிதி மற்றும் சொத்துக்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்குக் கிடைக்கச் செய்ய அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததும், பேச்சுவார்த்தைகளின் போது இந்த நிதியை விடுவிப்பது தொடர்பான நடைமுறைகளை இரு தரப்பும் பரஸ்பரம் ஆலோசித்து முடிவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.