அராலியில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை முன்னாள் இராணுவத் தளபதிக்கான நினைவேந்தல் நிகழ்வு
தமிழீழ விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்ட இலங்கை இராணுவ அதிகாரி லெப். ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ உள்ளிட்ட படையினரின் 32ஆவது வருட நினைவையொட்டி யாழில் (Jaffna) இராணுவ படைத்தரப்பினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணம் - அராலித்துறையில் குறித்த இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட இடத்தில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் நேற்று (08.08.2024) அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த அஞ்சலி நிகழ்வு, யாழ்ப்பாணம் மாவட்ட கட்டளை தளபதி மேயர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
கண்ணிவெடித் தாக்குதல்
1992ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பிரதேசத்தின் அராலித்துறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் லெப். ஜெனரல் டென்ஸில் கொப்பேகடுவ உள்ளிட்ட 9 இராணுவ அதிகாரிகளும், ஒரு சிப்பாயும் உயிரிழந்தனர்.
லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, மேஜர் ஜெனரல் விஜய விமலரத்தின, ரியர் அட்மிரல் மொஹோன் ஜயமக, கேணல் எச் ஆர் ஸ்டீபன், கேணல் ஜி எச் ஆரியரத்தின, கேணல் வை என் பலிபான, கொமாண்டர் அசங்க லங்காதிலக, லெப்டினன்ட் கேணல் நலிந்த டி சில்வா, லெப்டினன்ட் கொமாண்டர் சி பீ விஜயபுர மற்றும் இராணுவ சிப்பாய் டபிள்யூ டீ விக்ரமசிங்க ஆகியோரே இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
மேலதிக தகவல் - தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |