219 மருந்தகங்களின் உரிமங்கள் ரத்து
தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை கடந்த 18ஆம் திததிக்குள் நாட்டில் உள்ள 219 மருந்தகங்களின் உரிமங்களை ரத்து செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
2024-2025 ஆம் ஆண்டுக்கான உரிமங்களைப் புதுப்பிப்பதற்காக தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை 2,039 விண்ணப்பங்களைப் பெற்றதாகவும், 1,820 மருந்தகங்களுக்கு மட்டுமே உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இடைநிறுத்தப்பட்டுள்ள உரிமம்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நிரந்தர மருந்தாளுநர்கள் இல்லாததால் 137 மருந்தகங்களின் உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.
நிரந்தர மருந்தாளுநர்கள் பணிக்கமர்த்தப்படும் வரை அவர்களின் உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சமூக மருந்தக நடைமுறைகளுக்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறியதால் 82 மருந்தகங்களின் உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.




