ஜனாதிபதி கடன் மறுசீரமைப்புக்காக நிர்மலா சீத்தாராமனுக்கு கடிதம்: சீனாவின் பதிலும் எதிர்பார்ப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் உடன்படிக்கைக்கு முன்னதாக கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை, கடன் வழங்குனர்களுடன் தொடர்புகளை பேணி வருகின்றது.
கடந்த ஆகஸ்ட் 17ஆம் திகதியன்று, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடன் மறுசீரமைப்புக்கு உதவி கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்திற்கு முன்னதாக, வெளிவிவகார அமைச்சு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு இதே விடயம் தொடர்பாக மூன்றாம் நபர் குறிப்பையும் அனுப்பியுள்ளதாக அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது. எனினும் இந்தியா இன்னும் உரிய பதில்களை வழங்கவில்லை.
சீன கப்பல் வருகைக்கு பின்
இந்த நிலையில் சீனாவின் யுவான் வாங் 5 பயணத்திற்குப் பிறகு, இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஏற்கனவே ஆலோசனைக்காக புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
மேலும் சீனாவுக்கும் இந்த கோரிக்கையை முன்வைத்து ரணில் விக்ரமசிங்க கடிதம் அனுப்பியுள்ளார். சீனா இது தொடர்பிலான உத்தியோகபூர்வ பதில்களை வழங்கவில்லை.
இந்த நிலையில் இலங்கையின் கடன் மீளமைப்பு நிலைத்தன்மை குறித்த கோரிக்கைகள்
இன்னும் சாத்தியமாகாத நிலையில் இலங்கைக்கு வந்துள்ள சர்வதேச நாணய
நிதியம், இலங்கையில் இருந்து செல்லும் முன்னர் பணியாளர் உடன்பாட்டுக்கு
இணங்கும் என்று அரசாங்க மற்றும் எதிர்கட்சி தரப்புக்கள் நம்பிக்கை
வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.