மகிந்தவிற்கு ஜெட் விமானம் வழங்கியதாக கூறப்படும் தமிழர் - நட்டஈடு கோரி ஹிருணிகாவிற்கு கடிதம் (Photo)
தனக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும் அது புனையப்பட்டவை எனவும் கென்யாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சட்டத்தரணி வேலுப்பிள்ளை கனநாதன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எதிர்வரும் 27ம் திகதிக்கு முன்னர் மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அல்லது உரிய நட்டஈடு செலுத்த வேண்டும் எனவும் அவர் தனது சட்டத்தரணி ஊடாக ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு அறிவித்துள்ளார்.
கடந்த வருடம் திருப்பதிக்கு பயணித்த T7JSH இலக்கம் கொண்ட ஜெட் விமானத்தின் உரிமையாளர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேலுப்பிள்ளை கனநாதன் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் என்றும், உகண்டாவில் உள்ள சிலோன் கபேயின் உரிமையாளராகவும் இருந்ததாகவும், ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார் என கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் புனையப்பட்டவை என்று வேலுப்பிள்ளை கனநாதன் தெரிவித்துள்ளார்.
வேலுப்பிள்ளை கனநாதன் உகாண்டாவிலும் பல ஆப்பிரிக்க நாடுகளிலும் நன்கு அறியப்பட்ட தொழிலதிபர் என்றும், 1987 முதல் உகாண்டாவில் நீண்ட காலம் வாழ்ந்தவர் என்றும் நல்ல நிறுவன, அரசியல் மற்றும் சமூக நற்பெயரைக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹிருணிகா பிரேமச்சந்திரவின் அவமதிப்புக் கூற்றினால் எனது வாடிக்கையாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதோடு இதன் மதிப்பீடு 500,000,000 ரூபாய் என்று கனநாதனின் சட்டத்தரணி கூறியுள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் 27ம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திர பகிரங்கமாக தனது குற்றச்சாட்டுகளை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிடின் நட்டஈடை செலுத்த வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஆண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ச திருப்பதிக்கு செல்வதற்காக வேலுப்பிள்ளை கனநாதன் தனது பிரத்தியேக ஜெட் விமானத்தை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.



