முன்பள்ளிகளின் பெயர்கள் இராணுவத்தினரால் மாற்றப்படலுக்கு எதிராக ஆளுநருக்கு கடிதம்
கிளிநொச்சி - கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள முன்பள்ளிகளின் பெயர்களை இராணுவத்தினர் மாற்றியமையால் அது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வடக்குமாகாண ஆளுநருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
இந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது,
கிளிநொச்சி - கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகிநகர், புன்னைநீராவியிலுள்ள பாற்கடற் பூங்கா முன்பள்ளி மாற்றம் செய்யப்பட்ட நிலையில், மயில்வாகனபுரம் கிராமத்தில் அமைந்துள்ள 'மயூரன் முன்பள்ளியும் இராணுவத்தலையீட்டின் மூலம் 'வீரமுத்துக்கள் முன்பள்ளி' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்! கிளிநொச்சியில் சம்பவம் |
மீள்குடியேற்றம்
மயூரன் முன்பள்ளி இன்று(07) இராணுவத்தலையீட்டில் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாவட்ட கல்வி நிலையின் சுயாதீன இயங்கு நிலையை கேள்விக்கு உட்படுத்தியுள்ளதுடன் குறித்த இரு முன்பள்ளிகளும் அப்பிரதேச மக்களால் மூடப்பட்டுள்ளன.
கடந்த 2009 இறுதி யுத்தத்திற்குப் பிற்பாடு 2010ஆம் ஆண்டளவில் மீள்குடியேற்றம் நடைபெற்றபோது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கல்வித் திணைக்களங்களின் மேற்பார்வையில் நடாத்தப்பட்டு வந்த பல முன்பள்ளிகள் இராணுவத்தினரின் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவினரால் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு கற்பிக்கின்ற முன்பள்ளி ஆசிரியர்களும் சிவில் பாதுகாப்பு பிரிவின் நிர்வாக ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்டனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 303 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் 166 பேர், யாழ்ப்பாண மாவட்டத்தில் 12 பேர் உட்பட 481 முன்பள்ளி ஆசிரியர்கள் இராணுவப் படையணிச் சம்பளத்தைப் பெற்று கடமையாற்றும் சூழல் வலிந்து உருவாக்கப்பட்டது.
அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அதே சம்பளத்தை மாகாண கல்வி அமைச்சினூடாக வழங்கி முன்பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று நாடாளுமன்றத்திலும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் பலதடவைகள் என்னால் வலியுறுத்தப்பட்ட போதும் உரிய தரப்பினர் இதுவரை எந்த முனைப்பும் மேற்கொள்ளவில்லை.
உலகச் சிறுவர் உரிமைச் சட்டம்
குறிப்பாக உலக வரலாற்றில் எங்குமே இல்லாத வகையில் ஆரம்பக் கல்வியையே இராணுவமயப்படுத்தி உலகச் சிறுவர் உரிமைச் சட்டங்களை மீறிவருகின்றது. பச்சிளம் சிறுவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் இராணுவ மயப்படுத்தப்பட்ட கல்விமுறையை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிலும் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் திணிக்க முற்படுகின்றமையானது இன ஒடுக்கு முறையின் இன்னொரு வடிவமாகவே தென்படுகிறது.
வடக்கு, கிழக்கிலுள்ள ஒவ்வொரு முன்பள்ளிகளுக்கும், அந்தந்த முன்பள்ளிகள் அமைந்துள்ள கிராமங்களிலுள்ள மக்கள் சமூகத்தின், பண்பாடு, கலாசார, மொழி, நில, வரலாற்று அடையாளங்களின் பிரதிபலிப்பாகவே தனித்துவம் மிக்கதான தனித்தனிப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
அந்த முன்பள்ளிகளின் பெயர்கள் குறிப்பிட்டதோர் மக்கள் குழுமத்தின் உணர்வுகளோடு இரண்டறக்கலந்த அடையாளங்களாகவே பார்க்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், குறித்த முன்பள்ளிகளின் பொறுப்பாசிரியர்கள், முன்பள்ளி முகாமைத்துவக் குழு, பெற்றோர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூகமட்ட அமைப்புக்களின் ஒப்புதலற்று இராணுவத் தலையீட்டினால், பலவந்தமாக ஒரு முன்பள்ளியின் பெயரை வலிந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இராணுவத் துணைப்பிரிவொன்றின் சின்னம்
இராணுவத் துணைப்பிரிவொன்றின் சின்னம் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகையை காட்சிப்படுத்துவதென்பது எமது மாவட்டத்தின் கல்வித்துறையில் செல்வாக்குச் செலுத்தும் இராணுவ எதேச்சதிகாரத்தனத்தின் வெளிப்பாடே ஆகும்.
ஒரு இனத்தின் அடிப்படை மூலாதாரமான கல்வி உரிமையைப் பறிப்பதனூடாக அந்த இனக்குழுமத்தின் அடையாளம் அழிக்கப்படும் என்பதை அறிந்து, அவ்வாறான செயற்பாடுகளை தமிழர் தாயகப் பகுதிகளில் அரங்கேற்றி வருகின்றது. இதன்போது தாங்கள் வடக்கு மாகாண ஆளுநர் என்றவகையில் அக்கறை கொள்ளாதிருப்பது பல்வேறு வழிகளிலும் வலிதாங்கி நிற்கும் எமது மக்களை மேலும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.
முன்பள்ளிகளின் சுயாதீன இயங்குநிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவற்றுக்கு இராணுவப் பெயர்களைச் சூட்டும் நிகழ்ச்சிநிரலை பரவலாக அமுலாக்கம் செய்யும் முனைப்புக்களின் முதற் கட்டமாகவே பாற்கடற் பூங்கா முன்பள்ளி, மயூரன் முன்பள்ளி உட்பட வேறுசில முன்பள்ளிகளுக்கும் இராணுவப்பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதாக அறிகின்றேன்.
தமது கல்வி, அதனூடான வளமான எதிர்காலம் என்னும் அழகிய கனவுகளோடு முதலடி எடுத்துவைக்கும் முன்பள்ளிச் சிறுவர்கள் உள ரீதியான தாக்கங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் உள்ளாகாது தமது கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, முன்பள்ளிகளின் சுயாதீன இயங்குநிலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துவதன் மூலமே, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்வித்துறையில் இராணுவத்தலையீட்டை நீக்க முடியும்.
எனவே தயவுசெய்து, அரச நிர்வாக நடைமுறைகளுக்கு அமைய உருவாக்கப்பட்டு, நீண்டகாலமாக இயங்கிவரும் முன்பள்ளிகள், தமக்குரிய தனித்துவமான பெயரோடும் அடையாளத்தோடும் இயங்குவதற்கு ஏதுவாக சிவில் பாதுகாப்பு பிரிவினரால் புதிதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப்பலகைகளை உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
வடக்கு, கிழக்கிலுள்ள முன்பள்ளிகளின் பாரம்பரிய பெயர்களை நீக்கம் செய்து அவற்றுக்கு
இராணுவப் பெயர்களைச் சூட்டும் நிகழ்ச்சி நிரலை தடுத்து நிறுத்துவதற்கும்
நடவடிக்கை எடுக்குமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.