சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் (Photos)
கிளிநொச்சி மாவட்டத்தில் சமீப காலமாக இடம்பெற்று வருகின்ற பாரியளவிலான சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்தி மாவட்டத்தை எதிர்கால ஆபத்திலிருந்து பாதுகாக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு.சந்திரகுமார் ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
நேற்றைய திகதியிடப்பட்டு அவர் எழுதிய கடிதத்தில் மேலும்,
''இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 2% குறைவான பிரதேசத்தைத் தன்வசம் வைத்திருக்கும் கிளிநொச்சி மாவட்டம், தீவின் மொத்த நெல்லுற்பத்தியில் முதல் பத்து இடங்களுக்குள் எப்போதும் தேர்வாகியிருக்கிறது.
அரிசி உற்பத்தி தவிர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சிறுதானிய உற்பத்தியும் தேசத்தின் உணவு விநியோகத்திற்குக் கணிசமான பங்களிப்பினை வழங்கி வருகின்றது.
கிளிநொச்சியில் இருக்கக்கூடிய நீர்ப்பாசன வசதியுடைய 9 பெரிய-மத்தியதர குளங்களும், மழை நீரினை சேமித்து வைக்கக்கூடிய, இயற்கையாக உருவாகியுள்ள 359 சிறு குளங்களும் மேலே சொல்லப்பட்ட விவசாய நடவடிக்கைகளின் உயிர் நாடியாக விளங்குகின்றன.
போருக்குப் பின்னரான காலங்களில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சடுதியாக அதிகரித்திருந்த கட்டுமான வேலைகள், மிகப்பெரும் அளவில் மண்ணுக்கான தேவையை உருவாக்கிட, எவ்வித திட்டமிடலும் இல்லாத பாரிய மண்ணகழ்வு கிளிநொச்சியில் இருக்கக்கூடிய குளங்கள் மற்றும் நீர் வடிந்தோடும் வாய்க்கால்களை இலக்காக வைத்து வசதியுடைய தனிநபர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடனும் ஒரு சில அரசியல்வாதிகளின் அரவணைப்பிலும் மேற்கொள்ளப்படும் மேற்படி சட்ட விரோத மண்ணகழ்வு மாவட்டத்தின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய நீர் நிலைகளின் நிலவியல் அமைப்பினை சீர்குலைத்துள்ளதோடு, நெல்லுற்பத்திக்கு நீர் வழங்கக்கூடிய பெரும் நீர்த்தேக்கங்களின் கட்டுமானங்களைப் பாதிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.
கடந்த 24.01.2022 அன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் அரச அதிபர், மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வால், கிளிநொச்சியின் மிகப்பெரும் வளமான இரணைமடுக்குளம் எதிர்நோக்கும் ஆபத்துக்களைப் பட்டியலிட்டதோடு, விவசாயத்தின் மூலாதாரமாக இருக்கக்கூடிய அதனைப் பாதுகாக்க வேண்டிய தேவையையும் வலியுறுத்தி இருந்தார்.
இரணைமடு நீர்த்தேக்கம் மட்டுமின்றி மாவட்டத்தில் அமைத்திருக்கக் கூடிய அனைத்து குளங்களும் வாய்க்கால்களும் தொடர்ச்சியாக மண் மாபியாகளினால் சுரண்டப்பட்டு வரும் நிலையில் அவற்றினை பாதுகாக்குமாறு சூழலியலாளர்கள், பொது அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் எனப் பல தரப்பிடமிருந்தும் அரச நிர்வாகத்திற்கு வேண்டுதல்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
மேலும், மணல் அகழ்வைக் கண்டித்து ஒருசில இடங்களில் மக்கள் போராட்டங்களை நடத்தியுள்ளதோடு, உள்ளூர் மட்டத்தில் வீதிகளை மறிப்புச் செய்தும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றனர். எனினும், சட்டவிரோத மணல் அகழ்வுக்கு இன்றுவரை எவராலும் முற்றுப்புள்ளி வைக்க இயலவில்லை.
கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, இராணுவத்தினரின் உதவியுடன் அண்மையில் இரணைமடு குளத்தில் மேற்கொண்ட கள ஆய்வொன்றில், குளத்தின் பிரதானமான அணைக்கட்டுக்கு அண்மையில் இடம்பெறும் அதிர்ச்சி தரக்கூடிய மண்ணகழ்வை ஆவணப்படுத்தியதோடு, அணைக்கட்டில் விரிசல் ஏற்படக்கூடிய எதிர்கால சாத்தியங்களையும் சுட்டிக்காட்டியிருந்தது.
இந்த அணைக்கட்டில் ஏற்படக்கூடிய எந்தவொரு உடைப்பும், இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டிருந்த 2004 டிசம்பர் சுனாமியை விட மிகப்பெரும் மனித பேரவலம் ஒன்றைக் கிளிநொச்சிக்கு விட்டுச் செல்லும் என என பொறியியலாளர்கள் ஏற்கனவே எச்சரித்திருக்கிறார்கள்.
நன்னீர் நிலைகளுக்கு சமாந்தரமாக, கரையோர கிராமங்களில் குறிப்பாக கௌதாரிமுனை, கிளாலி மற்றும் பளையில் இடம்பெறும் சட்ட விரோத மணல் அகழ்வு, கடல் நீரை மனித குடியிருப்புக்களினுள் வரவழைத்து நிலத்தை உவராக்குவதன் ஊடாக கிளிநொச்சியின் ஆன்மாவான விவசாய முயற்சிகளை அழிக்கத் தொடங்கியிருப்பதோடு ''குஞ்சுக்குளம்'' போன்ற கிராமங்களிலிருந்து குடியிருப்பாளர்களை இடம்பெயரவும் செய்திருக்கிறது.
சட்டவிரோத மண்ணகழ்வில் ஈடுபட்டிருக்கும் நபர்கள், தங்களது அகழ்வு நடவடிக்கைகளில் இளைஞர்களையும் சிறுவர்களையும் கணிசமான அளவில் உள்வாங்கியிருக்கின்றார்கள். மேற்படி அகழ்வின் ஊடாக கிடைக்கப்பெறும் சராசரிக்கும் அதிகமான வருமானம், இளம் மற்றும் பால்ய வயதினரை மது, போதை மருந்துகளின் பக்கம் நாடச்செய்வதோடு, சட்டத்துக்கு எதிரான குழுக்களை உருவாக்கி வளர்ப்பதற்கும் துணை நிற்கின்றது.
மண் அகழ்வு தொடர்பாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யும் பொதுமக்கள், இத்தகைய குழுக்களால் தாக்கப்படும் சம்பவங்கள் கிளிநொச்சியில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே இயக்கத்தில் உள்ள, மண் அகழ்வுடன் தொடர்புடைய முறைசார் திணைக்களங்கள், பாதுகாப்பு தரப்பு மற்றும் மாவட்ட- பிரதேச தலைமை அரச நிர்வாகிகள் இடையூறின்றி தொடரும் மேற்படி சட்ட விரோத மண்ணகழ்வை தடுப்பதற்கு வழியின்றி தவிக்கின்றனர்.
மேலும், மாவட்டத்திலிருந்து
மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகளாலும் இது தொடர்பில்
தீர்வொன்றைக் காண இயலவில்லை. தயைகூர்ந்து, கண் முன்னே அரங்கேறும் இந்த
பேரவலத்தை முடிவுக்குக் கொண்டுவர உடன் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட மக்கள்
, நலன் விரும்பிகள் சார்பில் தங்களை வேண்டிக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





