கொவிட் தடுப்பூசிகளை கொண்டு வருவோம்: பவித்ரா
கொவிட் -19 வைரஸ் தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டுவர முன்னர் அதன் தரம், அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்தெல்லாம் ஆராய வேண்டியுள்ளதுடன், அது குறித்து ஆராய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
தொற்றுநோய் குறித்து ஆராயும் நிபுணர் குழுவின் பரிந்துரைகள் எமக்கு கிடைக்கப்பெற்றவுடன் குறித்த தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் குறிப்பிடுகையில், மேலும், கொவிட் -19 வைரஸ் பரவலை நாட்டில் கட்டுப்படுத்தும் விதமாக அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
இதில் பிரதான கடமைகளை சுகாதார அமைச்சும், பாதுகாப்பு துறையினர் மற்றும் அரச புலனாய்வுதுறையின் முழுமையான ஒத்துழைப்புடனும் தனியார் அமைப்புகள், சிவில் அமைப்புகளின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொண்டு வெற்றிகரமாக இவற்றை கையாண்டு வருகின்றோம்.
சகல மாவட்டங்களிலும் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுவதுடன், சட்ட விரோதமாக நாட்டுக்குள் நுழையும் வாய்ப்புகள் உள்ள சகல இடங்களையும் பலப்படுத்துவதுடன் அவ்வாறான பகுதிகளிலும் பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுப்பதும், வெளிநாடுகளில் இருந்து வரும் சகலருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பதும், அவர்களை 14 நாட்கள் தடுத்து வைத்திருந்து மீண்டும் அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பது என்ற காரணிகள் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
அதேபோல் இலங்கைக்குள் கொவிட் -19 வைரஸ் தடுப்பூசிகளை பெற்றுகொடுக்க ஏற்றுகொள்ளப்பட்ட வழிமுறைகளை கையாள்கிறோம்.அதற்கமைய சுகாதார பணிப்பாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள தொற்றுநோய் தடுப்பு பிரிவினரை உள்ளடக்கிய நிபுணர் குழு இந்த விடயங்களை கையாண்டு வருகின்றனர்.
இப்போது வரையிலும் குறித்த நிபுணர் குழு உலகில் இதுவரையில் கண்டறியப்பட்டுள்ள தடுப்பூசிகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். அதேபோல் தடுப்பூசியை கொண்டுவந்தால் அதனை களஞ்சியப்படுத்தும் முறைமை மற்றும் அதற்கான செலவுகள் குறித்தும் உப குழுக்கள் நியமிக்கப்பட்டு ஆராயப்பட்டு வருகின்றது.
கொவெக்ஸ் உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ள நாடுகளில் நாமும் உள்ளதனால் இலங்கையின் சனத்தொகையில் 20 வீதமானோருக்கு தடுப்பூசிகளை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு இருப்பினும் தொற்றுநோய் குறித்து ஆராயும் நிபுணர் குழுவின் மூலமாக முறையான தடுப்பூசி குறித்த பரிந்துரைகள் எமக்கு கிடைக்கப்பெற்றவுடன் குறித்த தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
கொவெக்ஸ் வேலைத்திட்டத்திற்கு அமைய இந்த ஆண்டு நடுப்பகுதியில் 20 வீதமான மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான உடன்படிக்கைகள், சட்ட திட்டங்கள் குறித்து தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் குறித்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது குறித்து உரிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக ஜனாதிபதி தனது பிரதிநிதியாக லலித் வீரதுங்க அவர்களை நியமித்துள்ளார். அவர் தொடர்ச்சியாக சர்வதேச நாடுகளுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றார் என குறிப்பிட்டுள்ளார்.