‘‘பெண்கள் மீதும் பூமித்தாய் மீதும் வன்முறைகளற்ற வாழ்வுக்காக எழுச்சி கொள்வோம்’’
அனைத்து பெண்கள், பால் பல் வகைமையினர் மற்றும் பூமித்தாயின் உடல்களுக்காக எழுவீர் எனும் தொனிப்பொருளில் நூறுகோடி பெண்களின் எழுச்சி 2022 பிரச்சாரம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
எனவே இந்த பிரச்சாரத்துடன் கிழக்கு பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் இணைந்து கொண்டு எதிர்வரும் 14 ம் திகதி பல்கலைக்கழக வட்டாரத்தினுள் மரக்கன்றுகளைக் கொண்டு ஒரு மரநடுகைப் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
கிழக்கு பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் என்.ஜெயராஜ். செயலாளார் ஜீ.மதுசாந்தன ஆகியோர் இன்று வியாழக்கிழமை (10) இன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
உலக சனத்தொகை கணக்கெடுப்பில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் தங்களது நாளாந்த வாழ்க்கையில் வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இத்தகைய வன்முறையான பண்பாடுகளை மாற்றி அனைவரும் இணைந்து வாழும் மகிழ்வான சூழலை உருவாக்குவோம் எனும் நோக்கில் அமெரிக்காவைச் சேர்ந்த நாடகவியலாளரும், பெண்ணிலைவாதியினால் முன்மொழியப்பட்டு, பெண்களுக்கு எதிரான வன்முறைகளாலோ, வேறெந்தவிதமான வன்முறைகளாலோ எங்கள் வாழ்வு இருட்டடிக்கப்படாது என்று அறைகூவவும், வன்முறைகளற்ற வாழ்வு மகிழ்வானது என்று பறைசாற்றவும் இந்தப் பிரச்சாரமானது கலைகளுக்கூடாக ஆடுவோம், பாடுவோம், பறையறைவோம் என்ற வகையில் எழுச்சி கொள்வதாக அமைகின்றது.
அதன் அடிப்படையில் நூறுகோடி பெண்களின் எழுச்சி 2022 பிரச்சாரமானது அனைத்து பெண்கள், பால் பல்வகைமையினர் மற்றும் பூமித்தாயின் உடல்களுக்காக எழுவீர்..' எனும் தொனிப் பொருளில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பானது ஆழமான நோக்கம் கொண்டது. பெண்கள் மற்றும் பால் - பால்நிலை அடிப்படையில் ஓரங்கட்டப்படும் மக்கள் அனைவருக்கும் வல்லமையளிக்கும் சமூக அரசியல் மாற்றத்தை நோக்காகக் கொண்டது.
எங்கள் எதிர்காலத்தை அச்சமற்ற, தைரியமான, ஒருவரை ஒருவர் மதிக்கும் ஆழமான நிலைப்பாடுகளின் அடிப்படையிலும், கலைகளின் ஊடாக நம்பிக்கையான வழியில் மேம்பட வைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே கிழக்கு பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் ஆகிய நாங்களும் இம்முறை இந்த எழுச்சி பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கு நூறுகோடி மக்களோடு இணைந்து கைகொடுத்துள்ளோம்.
பல்கலைக்கழகங்களுக்குள் இருக்கும் ஆதிக்க சூழல் அகற்றப்பட்டு உரிமையுடனான எதிர்கால சமூகங்களுக்கான முன்னோடிகளாக பல்கலைக்கழக மாணவ சமூகங்கள் உருவாகும் வகையில், அனைத்து மாணவர்களும் குறிப்பாகப் மாணவிகளும் தத்தமது ஆளுமை திறமைகளைக் கட்டற்று வெளிப்படுத்தும் உரிமைகள், வெளிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
மாணவர்களின் ஆளுமைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரச்சூழல் மாற்றப்பட வேண்டும், பாலியல் இலஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும், சிரேஷ;ட மாணவர்கள் புதிய மாணவர்கள் மீது அதிகாரம் பாராட்டும் பகிடிவதைகள் நிறுத்தப்பட வேண்டும். மாணவர்களுக்கு நட்பான பல்கலைக்கழக் சூழலை ஏற்படுத்தும் வகையில் உள்ளக நடைமுறைகள் சரியாகக் கடைப்படிக்கப்பட வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை ஆரோக்கியமான வகையில் முன்னெடுப்போம், தொடர்ச்சியாக நினைவில் வைத்து செயற்படுவோம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அருகிவருகின்ற மரக்கன்றுகளைக் கொண்டு ஒரு மரநடுகைப் பிரச்சாரத்தினை எதிர்வரும் 14.02.2022 அன்று பல்கலைக்கழக வட்டாரத்தினுள் செய்ய உள்ளோம்.
பூமியை வளப்படுத்தும் ஆரோக்கியமான மூலவிதைகளை அழிவடையாமல் பாதுகாத்து எம் எதிர்கால சந்ததியினரும் பலன் பெறும் திட்டங்களையும் நம்மில் இருந்து தொடங்குவோம்! பெண்கள் சுயமாகவும், சுதந்திரமாகவும், கட்டுப்பாடுகள் இன்றியும் கற்கும் - மேம்படும் பல்கலைக்கழகச் சூழலை உருவாக்குவோம்!
ஆதிக்கங்கள், பாசிசம், ஏகாதிபத்தியம், முதலாளித்துவம், காலநிலை நெருக்கடிகள்,
சேட்டைகள், பாலியல் வன்முறைகள், பாலியல் லஞ்சம் போன்றவற்றுக்கு எதிரான
உலகளாவிய எழுச்சிகளுடன், பெண்களுக்கெதிரான, பூமித்தாய்க்கு எதிரான
வன்முறைகளற்ற வாழ்வுக்காக நூறுகோடி மக்களினதும் எழுச்சியுடன் கிழக்கு
பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியமும் இணைகின்றது. என அந்த
அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



