புதிய ஜனாதிபதிக்கு சிறிது காலத்தை வழங்கி பார்ப்போம்:அத்துரலியே ரதன தேரர்
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிறிது காலத்தை வழங்க வேண்டும் எனவும் பிரபுத்துவ அரசியல் சந்ததியின் இறுதி வாரிசு அவர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இது வெற்றி கொள்ளக்கூடிய நெருக்கடி, இதற்கு தீர்வு இருக்கின்றது. எரிபொருள், சமையல் எரிவாயு வரிசைகளுக்கு மூன்று மாதங்களுக்கு எமக்கு தீர்வை வழங்க முடியும். தீர்வு இருக்கின்றது.
எரிபொருள் நெருக்கடியை மூன்று மாதங்களுக்கு தீர்க்க முடியும்
அதேபோல் நாட்டில் ஏற்பட போகும் உணவு நெருக்கடியை சமாளித்து வெற்றி பெற முடியும். மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்க முடியும்.
எனினும் புதிய ஜனாதிபதியின் ஊடாக எமக்கு இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியுமா என்பதை இன்னும் சிறிது காலம் சென்ற பின்னரே அறிய முடியும்.
ரணில் விக்ரமசிங்க மீது சிலர் தற்போது நம்பிக்கை வைத்துள்ளனர். அதற்கு நாம் இடமளிக்க வேண்டும்.
காலனித்துவ காலம் தொட்டு இருந்து வரும் பிரபுத்துவ அரசியல் சந்ததியின் இறுதி வாரிசு
இலங்கையில் போத்துகேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயே காலனித்துவ காலம் தொட்டு இருந்து வரும் பிரபுத்துவ அரசியல் சந்ததியின் இறுதியான வாரிசே ரணில் விக்ரமசிங்க.
இதனால், அவர் மீது நம்பிக்கை இருக்குமாயின், அவருக்கு சில காலம் இடமளிக்க வேண்டும். அந்த காலம் முடிந்த பின்னர் நாம் எமது யுகத்தை ஆரம்பிப்போம் எனவும் அத்துரலியே ரதன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.