கிரிக்கெட் அணியின் வீழ்ச்சிக்கு முன்னாள் வீரர்களே பொறுப்பு
இலங்கை கிரிக்கட் அணியின் தற்போதைய வீழ்ச்சிக்கு முன்னாள் வீரர்கள் பொறுப்பு சொல்ல வேண்டும் என அணியின் முன்னாள் தலைவர் ஹசான் திலகரத்ன (Hasan Thilakaratna) தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்கள் தற்போதைய அணியின் வீழ்ச்சிக்கு பொறுப்பு சொல்ல வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணைய ஊடகமொன்றின் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான மஹேல ஜயவர்தன, முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கார, அரவிந்த டி சில்வா உள்ளிட்ட பல்வேறு வீரர்கள் மீது இவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
குறிப்பாக இலங்கை கிரிக்கெட் அணிக்கு பயிற்றுவிப்பாளர் தெரிவுகளின் போது முன்னாள் வீரர்கள் தலையீடு செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் கிரிக்கட் வீரர்கள் மீது குற்றச்சாட்டு
அணியின் பயிற்றுவிப்பாளர் ஒருவரை தெரிவு செய்யும் போது அவருக்கு வழங்கப்படும் சம்பளத்தில் சுமார் 10 வீதமான தொகை மாதாந்தம் தரகுப் பணமாக வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது நண்பர்களை பயிற்றுப்பாளர் பொறுப்புக்கு பரிந்துரை செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், கடந்த 2016 ஆம் ஆண்டின் பின்னர் வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்களினால் இலங்கை கிரிக்கெட் துறைக்கு ஏற்பட்ட நன்மை என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் முன்னாள் நட்சத்திர வீரர் டொம் மூடியை முத்தையா முரளிதரன் பரிந்துரை செய்தார். எனினும் அவரிடம் முரளிதரன் தரகு பணம் பெற்றுக் கொண்டாரா இல்லையா என்பது தமக்கு தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறந்த வீரர்கள் சிறந்த பயிற்றுப்பார்களாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக அதிக ஓட்ட எண்ணிக்கை எடுத்தவர்களினால் அணியை பயிற்றுவிக்க முடியும் என கூற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் வெற்றியீட்டலாம்
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் சிலவேளைகளில் வெற்றி அடைய வாய்ப்பு உண்டு எனவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்காக போட்டியில் நிச்சயமாக வெல்ல முடியாது எனவும் ஹசான் தெரிவித்துள்ளார்.
தற்போதைய கிரிக்கெட் தெரிவுக்குழு பக்க சார்பின்றி தீர்மானம் எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளதோடு எந்த ஒரு தரப்பின் பக்கமும் சாய்ந்து விடாது சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒழுக்கம் தொடர்பான பிரச்சினை
அத்துடன், கிரிக்கெட் வீரர்களின் ஒழுக்கம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஹசான் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உயர் பதவிகளை வகிப்போர் ஒழுக்க மீறல்களில் ஈடுபட்டால் வீரர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, வெளிநாட்டு பயிற்றுவிப்பாளர்களை விடவும் இலங்கையில் சிறந்த பயிற்றுவிப்பாளர்கள் உள்ளதாக ஹசான் திலகரட்ன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |