அதிக ஒலி எழுப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை : யாழ். அரச அதிபர் தெரிவிப்பு!
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒலிபெருக்கி ஒலிகள் மூலம் ஏனையோருக்கு இடையூறு
மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக ஆலயங்கள் மற்றும் வேறு நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளால் அசௌகரியங்கள் ஏற்படுவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஆலயங்களில் உங்களது சமய நிகழ்வுகளின்போது ஒலிபெருக்கிகளை பயன்படுத்தும்போது அயலில் உள்ளவர்கள், மாணவர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் உங்களது ஒலிபெருக்கிகளை பயன்படுத்துங்கள்.
ஆலயங்கள் அமைந்துள்ள பகுதியில் இருந்து மிகவும் தொலைவில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு அதிக ஒலி எழுப்பப்படுகிறது. ஆகவே உங்களது ஆலயங்களில் எழுப்பப்படும் ஒலிபெருக்கி ஒலிகள் மூலம் ஏனையோருக்கு இடையூறு ஏற்படா வண்ணம் செயற்படுமாறு ஆலய நிர்வாகத்தினர் அல்லது தர்மகர்த்தாக்களை கேட்டுக் கொள்கிறேன்.
குறிப்பாக இரவு வேளைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த ஒலிபெருக்கி மூலம் இடையூறு ஏற்படுவதை நாங்கள் அறிந்திருக்கின்றோம். ஆகவே இதற்கு எதிராக நாங்கள் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளோம் எனறும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |