இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழிகாட்டுதல்களை மீறினால் பயண முகவர்கள் மீது சட்ட நடவடிக்கை
இலங்கைக்கு வருகை தரும் போது சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழிகாட்டுதல்களை மீறினால் அவர்களை அழைத்து வரும் பயண முகவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விடுத்துள்ளார்.
பரீட்சார்த்த திட்டம் ஒன்றின் கீழ் கடந்த மாதம் இலங்கைக்குச் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதன்படி உக்ரைன் நாட்டுச் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்ப மூன்று பயண முகவர் நிறுவனங்கள் ஒப்புக் கொண்டன.
இந்த நிலையில் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழிகாட்டுதல்களை மீறினால் எதிர்காலத்தில் பயண முகவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரணதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மாதம் தொடங்கப்பட்ட பைலட் திட்டத்தில் குறைபாடுகள் இருப்பதை அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்த மாத இறுதியில் வானூர்தி நிலையங்கள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர் அவை தீர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கண்டியின் தலதா மாளிகை உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகள் பார்வையிடக்கூடிய 14 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுற்றுலா அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டினர் இந்தப்பகுதிக்கு வருகை தரும் போது உள்ளூர் மக்களுக்காகச் சுற்றுலா தளங்கள் மூடப்படாது.
இருப்பினும், உள்ளூர் வாசிகளுக்கும் வெளிநாட்டினருக்கும் நெருங்கிய தொடர்பில்லாமல் இருப்பது உறுதி செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.