அரச உத்தரவை மீறி வீடுகளை விட்டு வெளியேறாத குடும்பங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
அரசாங்க உத்தரவை மீறி வீடுகளை விட்டு வெளியேறாத குடியிருப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையின் தலைவர் சரண கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
2003/ 24 ஆம் இலக்க கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபை சட்டத்தின் 10 ஆவது பிரிவின் பிரகாரம் பாதுகாப்பற்றது என உறுதி செய்யப்பட்ட வீட்டுத் தொகுதிகளை கையகப்படுத்தும் உரிமை வீடமைப்பு அமைச்சருக்கு இருப்பதாக தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்ட நடவடிக்கை
மாற்று இடம் வழங்கியும் அதனை விட்டும் வெளியேறாத குடியிருப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.
கூட்டு ஆதன மேலாண்மை சட்டம் 50 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தப்பட்டதொன்றாகும். தற்போது அந்தச் சட்டத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார்.
தற்போது பாதுகாப்பற்றதாக இனங்காணப்பட்ட 08 வீட்டுத் தொகுதிகளை மீள் அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டுத் தொகுதிகள் அரச மற்றும் தனியார் கூட்டுத் திட்டங்களாக மீள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையின் தலைவர் சரண கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
வீடமைப்புத் திட்டம்
கொழும்பு நகரில் பாதுகாப்பற்ற வீட்டுத் திட்டங்களாக வேகந்த வீடமைப்புத் திட்டம், பம்பலப்பிட்டி வீடமைப்புத் திட்டம், வேல்ஸ் குமார மாவத்தை வீடமைப்புத் திட்டம், சிறிதம்ம மாவத்தை வீடமைப்புத் திட்டம், கம்கருபுர வீடமைப்புத் திட்டம், மாளிகாவத்தை வீடமைப்புத் திட்டத்தின் பல கட்டிடங்கள், மிஹிந்து மாவத்தை வீடமைப்புத் திட்டம என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதில் 869 வீடுகளும் 619 கடைகளும் உள்ளடங்குகின்றன. இங்கு குடியிருக்கும் குடியிருப்பாளர்களை மாற்று இடங்களுக்கு அனுப்பி விட்டு மீள் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தலைவர் மேலும் குறிப்பிட்டார்.