உடனடியாக முறைப்பாடு செய்யவும் - பேருந்தில் பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவுறுத்தல்
பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச்சபை மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகளிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக பணம் வசூலிக்கப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உறுதி செய்யப்பட்டுள்ள மோசடிகள்
பொலிஸாரும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட சோதனைகளின் போது இவ்வாறான மோசடிகள் இடம்பெறுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எழுத்து மூலமான அல்லது வாய்மொழி மூலமான முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில், மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் விசாரணைகளை முன்னெடுத்து சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துரித தொலைபேசி இலக்கங்கள்
எனவே பேருந்துகளில் பயணிக்கும் போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதலான தொகையை வழங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான சட்டவிரோதச்செயல்களில் ஈடுபடும் பேருந்துகள் குறித்து 118, 119 ஆகிய துரித தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ முறைப்பாடு வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.