சீன வைரஸ் நாட்டை விட்டு வெளியேறு! - பிரித்தானியாவில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்ட விரிவுரையாளர்
தன்னை இந்த நாட்டில் இருந்து வெளியேறுமாறு கூறி தாக்கியதாக பிரித்தானியாவில் வைத்து தாக்குதலுக்கு உள்ளான சீனாவை சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் பெங் வாங் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். சவுத்தாம்டன் பல்கலைக்கழகத்தில் நிதி நிர்வாக விரிவுரையாளராக இருக்கும் 37வயதான பெங் வாங் (Peng Wang) என்பவர் தனது வீட்டின் அருகே உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது தாக்கப்பட்டார்.
இந்த சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றிருந்து. 20 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு பேர் இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
கொச்சையான சொற்களில் அவரைத் திட்டிய சந்தேகநபர்கள், குறித்த பேராசிரியரை தாக்கினர். இதனால் அவரின் முகத்திலும் கைகளிலும் காயங்கள் ஏற்பட்டன.
அருகில் இருந்தவர்கள் அவசர முதலுதவி வண்டியை அழைத்ததுடன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தனர்.
சம்பவம் தொடர்பில் 21 வயதான இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், தாக்குதல் தொடர்பில் சர்வதேச ஊடகங்களுக்குகருத்து வெளியிட்டுள்ள விரிவுரையாளர் பெங் வாங் இவ்வாறு கூறியுள்ளார்.
“சில பைத்தியக்காரர்கள் தங்கள் காரில் இருந்து என்னை மோசமாக திட்டினர், அவர்கள் என்னை ‘சீன வைரஸ்’ என்று சொன்னார்கள், இந்த நாட்டிலிருந்து வெளியேறுமாறு கூறினார்கள். பின்னர் என் மீது தாக்குதல் மேற்கொண்டார்கள்.
கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியர்களுக்கு எதிரான இனவெறிதாக்குதல் “பிரெக்ஸிட் மற்றும் தொற்றுநோயின்” பின்னர் மோசமாகிவிட்டது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
“பிரெக்ஸிட் மற்றும் தொற்றுநோய் பரவலுக்கு” பின்னரான இரண்டு ஆண்டுகளில் இனவெறி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கிழக்கு ஆசிய மக்களாகிய நாங்கள் தற்போது பிரித்தானியாவில் ஆபத்தான நிலையில் இருக்கிறோம்.
நிலைமை மோசமாகிவிட்டால், மிக விரைவில் இந்த நாட்டை விட்டு நான் வெளியேறுவேன்.” என தெரிவித்துள்ளார். இதேவேளை, கோவிட் - 19 தொற்று காரணமாகச் சீனப் பின்னணியைக் கொண்டவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரிக்கும் என்ற கணிப்பை இந்தச் சம்பவம் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை சீனப் பின்னணியைக் கொண்டவர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறையின் தொடர்பில் பிரித்தானிய பொலிஸாரிடம் 457 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.