'எவரையும் கைவிடாதீர்கள்' திட்டத்தின் விண்ணப்ப திகதி நீடிப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் 'எவரையும் கைவிடாதீர்கள்' எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நலன்புரி நன்மைகள் திட்டத்தின் விண்ணப்ப இறுதி திகதி அக்டோபர் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த திகதி அக்டோபர் 15 என அறிவிக்கப்பட்டிருந்து.
இறுதி திகதியில் மாற்றம்
இந்தநிலையில் நிவாரணங்களை எதிர்பார்ப்போர் மற்றும் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கத் தவறியவர்கள், இந்தக் காலகட்டத்தில் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.
சமுர்த்தி, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோய் உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து குடும்பங்கள், புதிய திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்று நலன்புரி நன்மை சபை தெரிவித்துள்ளது.
பதிவிறக்கம் செய்தல்
உரிய விண்ணப்பப் படிவத்தை நலன்புரி நன்மை சபையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ( www.wbb.gov.Lk) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், உரிய அதிகாரிகளின் அங்கீகாரத்துடன் அந்தந்த பிரதேச செயலகங்களில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அக்டோபர் 14ஆம் திகதி வரை, நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகங்களில் சமூக சேவைப்
பிரிவுகளால் 2.4 மில்லியன் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
எனினும் இந்த சமூக நலத் திட்டத்திற்கு 3.9 மில்லியன் குடும்பங்கள்
விண்ணப்பிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.