இலங்கையில் வாடிக்கையாளர்கள் பெற்றுள்ள குத்தகை மற்றும் வங்கி கடன்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
இலங்கையில் வாடிக்கையாளர்கள் பெற்றுள்ள குத்தகை மற்றும் வங்கி கடன்கள் தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி 25 இலட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் குத்தகை மற்றும் வங்கி கடன்களை செலுத்த முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளதாக குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துனர்கள் சங்கத்தின் தலைவர் அசங்க ருவன் பொத்துபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 20,000 ரூபாவாகவிருந்த குத்தகை கட்டணம் தற்போது 32,000 ரூபாவாக மாற்றம் பெற்றுள்ளது.
பாதிக்கப்படும் அரச சேவையாளர்கள்
அரச சேவையாளர்களுக்கு வங்கியில் வைப்பிலிடப்படும் வேதனம் வங்கியால் கடனுக்காக வசூலிக்கப்படுகின்றது. இதன் காரணமாக அரச சேவையாளர்கள் தற்போது பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளனர்.
வாகனங்கள் விபத்துக்குள்ளானால் அதற்கான நட்டஈடுகளை காப்புறுதி நிறுவனங்கள் வழங்க வேண்டும். ஆனால் தற்போது, எந்தவித நிலுவை தொகையும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்தை குத்தகை நிறுவனத்திடம் இருந்து பெற்று வருமாறு காப்புறுதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் கோருகிறது.
தொடர்ந்தும் அவ்வாறான கடிதங்களை காப்புறுதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் கோருமானால் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.