உணவகம் ஒன்றில் இடம்பெற்ற மோசடி! அதிரடியாக களமிறங்கிய குற்ற புலனாய்வு பிரிவினர்
கண்டி மத்திய சந்தையிலுள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளரும் ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உணவகத்தில் வைத்து சந்தேகநபர்கள் இருவரும் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் குளிர்பான போத்தல்களில் சட்ட விரோத மதுபானத்தை நீண்ட காலமாக விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றிவளைப்பு
நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த சட்ட விரோத மதுபான மோசடி தொடர்பான விபரங்களை கண்டி பிரதேச குற்ற புலனாய்வு பிரிவினர் நேற்று(22) கண்டுபிடித்துள்ளனர்.
சுற்றிவளைப்பின் போது 08 சட்ட விரோத மதுபான போத்தல்களுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஊழியர் இராணுவத்தின் விசேட அதிரடிப்படையின் சேவையில் இருந்து ஓய்வு பெற்றவர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
ஒருநாள் வருமானம்
கண்டி பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் அமைந்துள்ள கண்டி மத்திய சந்தையினுள் நீண்ட காலமாக இந்த சட்ட விரோத மதுபான வியாபாரம் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பில் கண்டி மாநகர சபையின் ஊடாகவும் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,1200 ரூபாவுக்கு ஒரு போத்தல் சட்ட விரோத மதுபானத்தை பெற்று அதனை தேநீர் கோப்பைகளில் விற்பனை செய்வதன் ஊடாக ஒரு போத்தலில் 2000 ரூபா வரை வருமானம் ஈட்டுவதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் நாளொன்றுக்கு 10 போத்தல்கள் இவ்வாறு விற்பனை செய்யப்படுவதன் ஊடாக 8000 ரூபா வரை மேலதிக வருமானத்தை உணவக உரிமையாளர் பெறுவதாகவும் தெரியவந்துள்ளது.