முக்கிய அமைச்சர் விரைவில் கைது!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வேறு ஒருவரின் காணியை சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த அமைச்சர் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முக்கிய அமைச்சர்
கல்கிஸ் நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கட்டிடமொன்றுடன் கூடிய 12 பேர்ச் காணி ஒர் சங்கமொன்றுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த காணியை அமைச்சர் அந்த சங்கத்தின் தலைவரை பதவி நீக்கி, தாம் அந்தப் பதவியை பெற்றுக்கொண்டு நுட்பமான முறையில் காணியை தனது பெயருக்கு மாற்றிக் கொண்டுள்ளதாக காவல்துறையினரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக குறித்த தெற்கு ஊடகம் தெரிவித்துள்ளது.
தனது பெயருக்கு காணி உரிமையை மாற்றியதன் பின்னர் கட்டிடத்தை ஒரு தரப்பினருக்கு குத்தகை அடிப்படையில் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் விசரணை
இந்த சம்பவம் தொடர்பில் அமைச்சின் உயர் அதிகாரிகள் பத்து பேரிடம் ஏற்கனவே பொலிஸார் விசரணை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த அமைச்சர் அமைச்சரவையில் முக்கிய அமைச்சர் பதவியொன்றை வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை அமைச்சர் கடந்த காலங்களில் நிராகரித்திருந்தார்.
இந்த நிலையில் கைது குறித்த வெளியான தகவல்கள் தொடர்பில் அரசாங்கத் தரப்பில் எவ்வித அதிகாரபூர்வ விபரங்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.