தமிழ் மக்களை மீண்டும் அழிவுப்பாதைக்கு கொண்டு செல்ல வேண்டாம்! தர்மலிங்கம் சுரேஸ் வேண்டுகோள் (Video)
இந்திய இலங்கை ஒப்பந்தம் என்பது வெறுமனே இந்திய நலனுக்காக இலங்கையினை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் செய்யப்பட்ட ஒன்றாகும் எனவும். அதனை மீண்டும் கொண்டுவந்து தமிழ் மக்களை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்ல வேண்டாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரசின் முன்னாள் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 22வது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் காரியாலயத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த 2005ஆம் ஆண்டு மாமனிதர் குமார் பொன்னம்பலம் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். அவரை நினைவுகூரும் வகையில் இன்று காலை மட்டக்களப்பு காரியாலயத்தில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.