ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் தனி வீடுகள் கட்டியமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு " எனும் அரசாங்க கொள்கை திட்டத்திற்கு அமைய நாட்டின் பிரதமரும் ,வீடமைப்பு அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தலைமையில், அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் காலி - வலஹன்தூவ தோட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் வீடமைப்பு கருத்திட்டத்தின் கீழ் தனி வீடுகள் கட்டியமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இத்திட்டத்திற்கான நிதியை இந்திய அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.அத்துடன் மறைந்த அமைச்சர் அமரர் ஆறுமுகம் தொண்டமான் அமைச்சு காலத்தில் உடுகம ஹேமந்தொல தோட்டத்தில் 50 தனி வீடுகள் அமைக்கும் திட்டம் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிகழ்வில் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஸ் பத்திரன, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய முக்கிய அதிகாரிகள் உள்ளிட்ட நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதுபாண்டி ரமேஸ்வரன்,காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பத் அத்துக்கொரால,இசுரு தொடாங்கொட மற்றும் அமைச்சின் செயலாளர் டி.பி.ஜி.குமாரசிரி ஆகியோருடன் மத்திய மாகாண சபை உறுப்பினர் சத்திவேல் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.




