பொதுமக்களின் காணிகளை அபகரிக்க முயன்ற சட்டத்தரணி - மக்கள் குற்றச்சாட்டு
திருகோணமலை- பன்குளம் பிரதேசத்தில் யுத்த காலத்தின் போது விட்டுச்சென்ற பொதுமக்களின் காணிகளை சட்டத்தரணியொருவர் அபகரிக்க முயன்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
பன்குளம் பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் உள்ள காணியிலேயே இன்று (30) இந்த அபகரிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
1968 ஆம் ஆண்டில் பன்குளம் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து மீண்டும் மீள் குடியேற்றப்பட்ட நிலையில், குறித்த காணி உரிமையாளர்கள் வாழ்ந்து வந்ததாகவும் இதனையடுத்து அவர் உயிரிழந்த நிலையில் அவரது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் வசித்து வந்ததாகவும் அக்கிராமத்தில் வசித்து வரும் கதிர்வேல் என்பவர் தெரிவித்தார்.
திருகோணமலையில் வசித்து வரும் பிரபல சட்டத்தரணி ஒருவருக்கு பிரதேசத்தில் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் இருப்பதாகவும், இதேவேளை பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் உள்ள காணி தன்னுடையது என தெரிவித்து காணிக்குள் வருகை தந்த போது அக்கிராம மக்கள் தங்களுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதேவேளை, மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி குறித்த இடத்திற்கு விஜயம் செய்து காணி தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் வழக்கில் முடிவு கிடைக்கும் வரை எவரும் செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த காணி தொடர்பிலான அத்தாட்சிகள் தன்னிடம் இருப்பதாகவும் சட்டத்தரணி இதன்போது பொலிசாரிடம் குறிப்பிட்டார்.
ஆனாலும் கிராம மக்கள் அக்காணி சட்டத்தரணிக்கு சொந்தம் இல்லை எனவும் இது பொதுமகன் கூறிய காணி எனவும் சட்டத்தரணி நுழைய வேண்டாம் எனவும் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.






