நாமலை காட்டிக்கொடுத்த கோடீஸ்வர வர்த்தகரை பழிவாங்க ராஜபக்சர்கள் நடவடிக்கை
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற லஞ்ச விவகாரம் தொடர்பாக, தொழிலதிபர் நிமல் பெரேராவுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் வழக்குத் தொடர திட்டமிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு நெருக்கமான குழுவினர் இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிமல் பெரேரா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணையின் அடிப்படையில் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நிதி மோசடி
மேலும், நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் மேற்கொள்ளப்படும் விசாரணையில் அவர் நான்காவது சந்தேக நபராகவும் பெயரிடப்பட்டார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனாவின் மனைவிக்கு எயார்பஸ் நிறுவனம் வழங்கிய இலஞ்ச பணத்தில் ஒரு பகுதியான 800,000 அமெரிக்க டொலர்கள், தனது நிறுவனத்திற்குச் சொந்தமான வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டதை நிமல் பெரேரா தனது வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டார்.
அத்துடன், அதற்கு இணையான தொகையான 100 மில்லியன் ரூபாயை நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச இலஞ்ச பரிவர்த்தனை மூலம் கிடைத்த பணத்தின் ஒரு பகுதியை தனது சொந்தக் கணக்கில் வைப்பிலிட்டதன் மூலம் பணமோசடியில் ஈடுபட்டதை நிமல் பெரேரா ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளார்.
இதற்கு பழிவாங்கும் நோக்கில் நிமல் பெரேராவுக்கு எதிராக அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நாமல் ராஜபக்சவுக்கு நெருக்கமான குழுவினர் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.