சிலந்தி வலை சட்டத்திற்குள் சிறிய விலங்குகளே சிக்கும் : அநுர தெரிவிப்பு
அதிகாரத்தில் இருப்பவர்கள், தமது பொறுப்புக்களை திறம்பட நிறைவேற்றத் தவறினால் சட்டங்கள் அர்த்தமற்றவை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ( Anura Kumara Dissanayake) வலியுறுத்தியுள்ளார்.
எனவே, மோசடி மற்றும் ஊழலுக்கு எதிரான தனது அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும், அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், நேற்று நடைபெற்ற சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, வெளிப்படையான மற்றும் பொறுப்புணர்வூட்டக்கூடிய நிர்வாகக் கட்டமைப்பிற்கான தனது பார்வையை கோடிட்டுக் காட்டியுள்ளார்.
நாட்டின் ஒட்டுமொத்த அமைப்பு
தற்போதுள்ள பொறிமுறைகளின் திறனற்ற தன்மையை அவர் இதன்போது எடுத்துரைத்துள்ளார்
நீதிமன்ற வழக்குகள் திரும்பப் பெறப்பட்டால், அதற்கான காரணத்தை விளக்க வேண்டும்.
ஏழெட்டு இழுப்பறைகளில் கோப்புகள் சிக்கியிருந்தால், அவை ஏன் சிக்கியுள்ளன என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும்.
நாட்டின் ஒட்டுமொத்த அமைப்பும் சிதைந்துவிட்டது. நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப இந்த முழு அமைப்பையும் மீட்டெடுக்க வேண்டும்.
ஒரு சிறிய சட்ட சிக்கலைத் தீர்ப்பதன் மூலமோ அல்லது ஒரு நிறுவனத்தை மறுசீரமைப்பதன் மூலமோ அதை அடைய முடியாது.
அமைப்பை மீட்டெடுத்து, நாட்டை மீண்டும் ஆரோக்கியமாக்குவதே தமது குறிக்கோள். அதுவே தமது எதிர்பார்ப்பு என திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சட்ட அமைப்பில் நம்பிக்கை இல்லை
தற்போதைய நிலை சமத்துவமற்றது மற்றும் பயனற்றது என்று விபரித்த ஜனாதிபதி, சட்டங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பயன்பாட்டையும் விமர்சித்துள்ளார்.
ஒரு வருடத்தில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, இரண்டு சாதாரண பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஒரு கிராம சேவகர் மற்றும் ஒரு எழுதுவினைஞர் ஆகியோரை மட்டுமே தண்டித்துள்ளது.
இதன்படி, இந்தச் சட்டம் சிலந்தி வலையைப் போல செயல்படுத்தப்பட்டுள்ளது -அதனால் பெரிய விலங்குகள் உடைத்துக்கொண்டு போகும்போது சிறிய விலங்குகள் மாத்திரம் சிக்கிக் கொள்கின்றன.
அப்படியொரு சட்டம் இருப்பது மக்களுக்குத் தெரியும், அது நியாயமாகச் செயல்படுத்தப்படவில்லை என்பதும் மக்களுக்குத் தெரியும்.
எனவே, சட்ட அமைப்பில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை, அந்த நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவது இன்றியமையாதது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |