சட்டம் தன் கடமையைச் செய்யும்போது ஏன் அஞ்சுகிறீர்கள் : அமைச்சர் சமந்த வித்யாரத்ன கேள்வி
சட்டம் தன் கடமையைச் செய்யும்போது எதிர்க்கட்சியினர் ஏன் அச்சப்படுகின்றனர் என அமைச்சர் சமந்த வித்யாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படும் போது ஏற்படும் அச்சத்தையே எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டு வெளிப்படுத்தி வருகின்றனர் என்றும், அவற்றை அரசு ஒருபோதும் பொருட்படுத்தாது என்றும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மற்றும் மோசடிகள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சிகள் காலத்துக்குக் காலம் ஒவ்வொரு பேசுபொருள்களை உருவாக்கி அரசின் மீது வீணான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றது.
கடந்த ஆண்டு கொள்கலன்கள் குறித்துப் பேசினார்கள். இப்போது வேறு விடயங்களைக் கையில் எடுக்கின்றார்கள். அவர்களால் முன்வைக்கப்படும் அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் நாம் நாடாளுமன்றத்தில் தகுந்த பதிலளித்துள்ளோம்.
குறிப்பாக, நிலக்கரி விவகாரத்தில் எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளோம்.
நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக, மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே அனைத்துத் தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களைப் போலன்றி, தற்போது நீதித்துறை சுயாதீனமாக்கப்பட்டுள்ளதால் அரசியல் தலையீடுகள் இன்றி எவரும் சட்டத்தை நாட முடியும் சமையல் எரிவாயுப் பிரச்சினை ஏற்பட்ட போது, மிகக் குறுகிய காலத்தில் அதற்குத் தீர்வை வழங்கினோம்.
அரசின் மீதான மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருவதுடன், ஊழல் மற்றும் மோசடிகள் ஒழிக்கப்பட்டு பொருளாதாரம் சீரான பாதையில் பயணிக்கின்றது அரசின் இந்த வெற்றிகரமான பயணத்தால் எதிர்க்கட்சிகளின் அரசியலுக்கு இடமில்லாமல் போயுள்ளது.
இதன் காரணமாகவே, சட்டம் தன் கடமையைச் செய்யும்போது அவர்கள் அச்சமடைந்து கூச்சலிடுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.