அரசியலமைப்பை மீறி சட்டம் இயற்ற முடியாது
இலங்கை (Sri Lanka) அரசியலமைப்பு நாட்டின் உயர் சட்டமாக கருதப்படுகின்ற நிலையில் நாடாளுமன்றம் அரசியலமைப்பை மீறி சட்டம் இயற்ற முடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கான செயல் அமர்வில் வளவாளராக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் மீயுயர் சட்டம்
மேலும் தெரிவிக்கையில், ”ஜனாதிபதியின் பதவிக்காலம் அரசியலமைப்புக்குட்பட்டே இடம்பெறும்.
புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவார் என அரசியல் அமைப்பு ஏற்பாடுகள் தெளிவாக கூறுகிறது.
அரசியலமைப்பு நாட்டின் மீயுயர் சட்டமாக காணப்படுகின்ற நிலையில் அரசியலமைப்பை
மீறி நாடாளுமன்றம் அதாவது நிர்வாக துறை சட்டங்களை இயற்ற முடியாது.குற்றவியல் சட்டத்தின் கீழ் கைதுகள் நியாயமான சந்தேகத்துக்கு அப்பால்
நிரூபிக்கப்பட வேண்டும்.
இலங்கை அரசியல் அமைப்பின் அத்தியாயம் மூன்று அடிப்படை உரிமைகள் தொடர்பான ஏற்பாடுகளைக் கொண்டிருக்கின்ற நிலையில் பத்து தொடக்கம் பதினான்கு வரை தனிமனித அடிப்படை உரிமை தொடர்பில் ஏற்பாடுகள் இடம் பெற்றுள்ளதுடன் 15 ஆம் உறுப்புரை மட்டுப்பாடுகள் தொடர்பிலும் 16வது உறுப்புரை நிலை மாறுகால ஏற்பாடுகள் தொடர்பான ஏற்பாடுகள் காணப்படுகின்றன.
ஆகவே இலங்கை அரசியலமைப்பு நாட்டின் மீயுயர் சட்டமாகக் காணப்படுகின்ற நிலையில் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் சட்டத்தின் ஆட்சியை நிறைவேற்றுவதற்கும் அவை மீறப்படும் சந்தர்ப்பங்களில் பரிகார நீதியை பெறுவதற்கும் வழி வகுக்கின்ற நிலையில் நாடாளுமன்றம் அரசியல் அமைப்பை மேரே சட்டம் இயற்ற முடியாது” எனவும் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |