மட்டக்களப்பு மாநகர சபையினால் மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு
மட்டக்களப்பு மாநகரமானது டெங்கு நோய் பரவும் இடங்களில் ஒன்றாக அடையாளப்பட்டதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாநகர சபையினால் சுட்டிக்காட்டப்பட்ட பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மாணிக்கவாசகர் தயாபரன் தலைமையில் மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் இன்று (17.02.2021) டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கோவிட்-19 அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் டெங்கின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் இந்தச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக நீர் தேங்கி நிற்கக் கூடிய வடிகான்கள், கிணறுகள், வெற்றுக் காணிகள் என்பன மாநகர சபையின் ஊழியர்களாலும், கனரக வாகனங்களினாலும் துப்பரவு செய்யப்பட்டதுடன் இது தொடர்பில் பொதுமக்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
மேற்படி டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் மட்டக்களப்பு மாநகர சபையின் பொறியியலாளர் சித்திராதேவி லிங்கேஸ்வரன், மாநகர சபை உறுப்பினர் முகமட்நிஃப்ளார், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜூட் செல்லா ராஜரெட்ணம்,அபிவிருத்தி உத்தியோகத்தர் ஷில்மி, மஞ்சந்தொடுவாய் பெண்கள் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவி றிபாயா உட்பட பிரதேச இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.