பல சர்ச்சைகளுக்கு மத்தியில் ஞானசார தேரரின் புதிய நூல் வெளியீடு - நிகழ்வில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள்
பல்தரப்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் எழுதிய நூல் ஒன்று கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு நேற்று(20.09.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக இஸ்லாம் மதத்தின் மீது கடுமையான நிந்தனைகளை முன்வைத்து வரும் ஞானசார தேரருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு தொடக்கம் உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்கள் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தன.
இஸ்லாம் மதத்திற்கோ வேறு மதங்களுக்கோ எந்தவித நிந்தனையும் செய்யக்கூடாது என்பது குறித்த உத்தரவுகளின் சாராம்சமாகும். அவ்வாறான நிலையிலும், கடந்த காலங்களில் தொடர்ச்சியாக அவர் இஸ்லாமியர் மற்றும் கத்தோலிக்கர்களை பிரதானமாக இலக்கு வைத்து கடுமையான மத நிந்தனைகளை மேற்கொண்டிருந்தார்.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவு
இதற்கிடையே கடந்த 2019ஆம் ஆண்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு சிறைத்தண்டனை, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தலையீட்டின் கீழ் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு மூலம் எட்டே மாதங்களில் நிறைவுற்றது.

அதற்கு எதிராக சந்தியா எக்னெலிகொட தொடுத்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கின் காரணமாக ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை ரத்துச் செய்துள்ள உச்சநீதிமன்றம், அவரது தண்டனையின் எஞ்சிய காலத்துக்கு சிறைவாசம் அனுபவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்து விட்ட நிலையிலும் ஞானசார தேர்ர் இன்றும் வெளியில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கும் வேளையில், நேற்று(20) நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
குறித்த நூல் வெளியீட்டு நிகழ்வில் முன்னாள் அமைச்சர்களான சரத் வீரசேகர, சன்ன ஜயசுமண மற்றும் ஏராளமான தேரர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Aanadhi அவரால் எழுதப்பட்டு, 20 September, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.