சர்ச்சைக்குரிய நேரத்தில் அதிகரிக்கப்பட்ட லாஃப்ஸ் வாயுவின் விலை! விசாரணைக்கு அழைப்பு
லாஃப்ஸ் எரிவாயு (LAUGFS Gas) விலை உயர்வு விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக, அந்நிறுவனத்தின் அதிகாரிகள் நாளை (16) நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
லாப்ஸ் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் விளக்கம் கோருவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் லாஃப்ஸ் வாயுவின் விலையை உயர்த்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, இதுவரை 4,965 ரூபாவாக இருந்த 12.5 கிலோகிராம் நிறை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,775 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 6,740 ரூபாவாக உயர்ந்துள்ளது.
1,988 ரூபாவாக இருந்த 5 கிலோகிராம் நிறை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 732 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 2,720 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
எரிவாயு விநியோகத்தை சரியான முயைில் மீண்டும் தொடங்காததற்காக அந்நிறுவனத்தின் மீது அரசாங்கம் சமீபத்தில் சட்ட நடவடிக்கை எடுத்த பின்னணியில் இந்த விலை உயர்வு நிகழ்ந்துள்ளது.
இருப்பினும், உலகச் சந்தை விலைகளின் உயர்வு, அதிகரித்த கப்பல் போக்குவரத்துக் கட்டணங்கள், அதிகரித்த காப்பீட்டுக் கட்டணங்கள் மற்றும் அந்நியச் செலாவணி ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றின் காரணமாகவே எரிவாயுவின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் நலிந்த குருகுலசூரிய தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், லாஃப்ஸ் வாயுவின் விலை உயர்வு விவகாரத்தைக் கையாள அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சர் சுனில் சுனில் ஹந்துன்நெத்தி கூறியுள்ளார்.