பிரித்தானியாவில் வேகம் எடுக்கும் புதிய காய்ச்சல்! முதல் மரணம் பதிவானது
இங்கிலாந்தின் கிழக்கு பகுதியில் லஸ்ஸா காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் உறுதி செய்துள்ளன.
லஸ்ஸா காய்ச்சலால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி கடுமையான வைரஸ் நோயால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளில் விலங்குகளால் பரவும் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயால் அந்த நபர் உயிரிழந்துள்ளதாக இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் (UKHSA)தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த தொற்றினால் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்து "மிகக் குறைவு" என்று இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களில் இங்கிலாந்தில் லஸ்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூன்றாவது நபர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கருத்து வெளியிடுகையில்,
"நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்னர் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களை நாங்கள் தொடர்புகொண்டு, பொருத்தமான மதிப்பீடு, ஆதரவு மற்றும் ஆலோசனைகளை வழங்குகிறோம்." என தெரிவித்தார்.
பெட்ஃபோர்ட்ஷையர் வைத்தியசாலை அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளர் கருத்து வெளியிடுகையில், "எங்கள் அறக்கட்டளையில் லஸ்ஸா காய்ச்சலை உறுதிப்படுத்திய நோயாளியின் சோகமான மரணத்தை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்” என தெரிவித்துள்ளார்.
"நாங்கள் நோயாளியின் குடும்பத்தினருக்கும் எங்கள் ஊழியர்களுக்கும் தொடர்ந்து ஆதரவளிப்போம், மேலும் வலுவான தொடர்புத் தடமறிதல் பயிற்சியை மேற்கொள்வதற்காக நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம்." என குறிப்பிட்டார்.
லஸ்ஸா காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில், அண்மையில் அடையாளம் காணப்பட்ட மூவருக்கு முன்னதாக 1980 முதல் இங்கிலாந்தில் லஸ்ஸா காய்ச்சலின் எட்டு நோயாயர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
2009ம் ஆண்டுக்கு பின்னர் இங்கிலாந்தில் குறித்த நோய் பாதிப்புக்கு இலக்காகும் முதல் நபர்கள் இவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.