காடுகளைக் கண்காணிக்க லைடார் தொழில்நுட்பம் - ஸ்கொட்லாந்தின் புதிய திட்டம்
காடுகளைக் கண்காணிக்க புதிய அறிவியல் நுட்பமான லைடார் தொழில்நுட்பத்தை ஸ்கொட்லாந்து பயன்படுத்தி வருகிறது.
இந்த தொழிநுட்ப உதவியின் மூலம் மழைக்காடுகள் முதல் புல்வெளிகள் வரையான பகுதிகள் முப்பரிமாண புகைப்படங்கள் மூலம் ஆராயப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தொழிநுட்பம் மூலம் அந்நாட்டின் நிலவளம் மற்றும் சூழல் ஆரோக்கியம் பற்றிய துல்லியமான தகவல்களை ஆண்டு தோறும் பெற முடியும் என கூறப்படுகிறது.
முப்பரிமாண ரீதியில் ஆராய்ச்சி
இத்தொழில்நுட்பத்தின் உதவியுடன் காட்டுத்தீ சம்பவங்கள் நிகழக்கூடிய இடங்களை முன்கூட்டியே கண்டறிதல், தடுப்பு நடவடிக்கைகள், காட்டு மரங்களின் ஆரோக்கிய நிலை, அவற்றின் அளவு போன்றவை பற்றிய தகவல்களை உடனுக்குடன் பெறலாம் என கூறப்படுகிறது.
லைடார் (Lidar) (Light Detection and Ranging) என்பது லேசர் கதிர்களைப் பயன்படுத்தி தொலை உணரி முறையில் ஒரு குறிப்பிட்ட இடத்தை முப்பரிமாண ரீதியில் படமெடுத்து ஆராயும் முறை ஆகும்.
இது காலநிலை, உயிர்ப் பன்மயத்தன்மை ஆகியவற்றை மதிப்பீடு செய்தல், காடுகளில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கார்பன் சந்தை (Carbon marketing) பற்றி உயர் தொழில்நுட்ப தரவுகளை பெறுதல் மற்றும் புவி வெப்ப உயர்வினால் சூழல் மண்டலங்களில் ஏற்படும் மாற்றங்களை அறிய முடியும் என கூறப்டுகிறது.
வெவ்வேறு உயரத்தில் வளர்ந்திருக்கும் காட்டு மரங்கள் ஒவ்வொன்றின் உயரம், ஆரோக்கியம் பற்றியும் ஒரு மரத்திற்கும் மற்றொரு மரத்திற்கும் இடையில் இருக்கும் இடைவெளி, மரங்களின் வரிசைகளுக்கு இடையில் இருக்கும் காட்டுப் பாதைகளின் நிலை பற்றிய விவரங்களை கண்டறியப்படும் என கூறபடுகிறது.
ஆய்வாளர் வெளியிட்ட தகவல்
இந்த விடயம் தொடர்பில் உள்நாட்டு ஆய்வாளர் வெளியிட்ட தகவலில்,
"காடுகள் உறிஞ்சும் அல்லது உமிழும் கார்பனின் அளவுகள் துல்லியமானதாக இருக்க வேண்டும்.
லைடார் ஸ்கேனர்களைப் பயன்படுத்தி எடுக்கப்படும் படங்கள் ஒரு நாட்டின் சூழல் ஆரோக்கியம் பற்றிய உண்மையான நிலையை எடுத்துக் கூறுகிறது.
புல்வெளி நிலப்பரப்பு மற்றும் காடுகளில் இருக்கும் உயிர்ப்பொருள் (biomass) கார்பன் பற்றியும் இதன்மூலம் மதிப்பிட முடியும் என்று, ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழக சூழல் மண்டல ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் யட்வேந்தர்சிங் மால்ஹை (Yadvinder Singh Malhi) கூறுகிறார்.
சூழல் பாதுகாப்பு
லைடார் தொழில்நுட்பம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே சிறிய அளவில் தனியாரால் பயன்படுத்தப்படுகிறது.
இதனால் காடுகள் பற்றிய நிலையைத் துல்லியமாக அறிய முடிவதில்லை. ஸ்காட்லாந்து போல உலக நாடுகள் அனைத்தும் இயற்கை மீட்பிற்கும், சூழல் பாதுகாப்பிற்கும் இத்தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஸ்காட்லாந்தை மற்ற நாடுகள் இதற்கு முன்மாதிரியாகக் கொண்டு செயல்படவேண்டும்." என தெரிவித்துள்ளார்.