முன்னாள் இராணுவச் சிப்பாய் மூலம் பாதாள உலகக் கும்பலால் லசந்த சுட்டுப் படுகொலை
இராணுவத்தை விட்டு வெளியேறிய சிப்பாய் ஒருவருக்கு வழங்கப்பட்ட நிதி ஒப்பந்தம் ஊடாக தென் மாகாணத்தில் இயங்கும் பாதாள உலகக் கும்பலால், வெலிகம பிரதேச சபை தவிசாளர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக் கொல்லப்பட்டார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலையைச் செய்த கொலையாளி இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் அவரைக் கைது செய்ய விசேட பொலிஸ் குழு விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூடு நடந்த நேரத்தில் பதிவான சிசிரிவி காட்சிகள் மூலம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கொலையாளியை அடையாளம் காண முடிந்ததாக விசாரணைக் குழுக்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், கொலையாளி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த பாதாள உலகக் குழு உறுப்பினர் ஆகியோர் லசந்த விக்கிரமசேகரவைக் கொலை செய்த பிறகு அவர்கள் சென்ற வழியைக் கண்டறிய நேற்று முதல் பொலிஸார் அந்தப் பகுதியில் உள்ள சிசிரிவி கமராக்களை ஆய்வு செய்யத் தொடங்கினர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மற்றொரு கூட்டாளியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார் எனவும், வழியில் இருவரும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றனர் எனவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், கொலை நடந்த நேரத்தில் அந்தப் பகுதியில் நடந்த உரையாடல்கள் குறித்த தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளையும் பொலிஸார் பெற்று, அதன் அடிப்படையில் தனி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இரகசிய வாழ்க்கை
இந்தக்கொலையில் மிதிகம ருவான், மிதிகம சுட்டி மற்றும் ஹரக்கட்டா ஆகிய பாதாள உலகக் குண்டர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமசேகர கடந்த சில ஆண்டுகளாகவே மரண பயத்தில் இருந்தார் என்று தெரியவந்துள்ளது.

இந்த மரண பயத்தின் காரணமாக, அவர் ஒரு இரகசிய வாழ்க்கை வாழப் பழகியிருந்தார் எனவும், தனது வசிப்பிடத்தைக் கூட மாற்றியிருந்தார் எனவும் விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.
லசந்தவுக்கு வந்த மிரட்டல்கள் காரணமாக அவர் சுமார் 15 தனிப்படை காவலர்களை வைத்திருந்தார் எனவும் தெரியவந்துள்ளது. இருப்பினும், கொலை நடந்த நேரத்தில் அந்தக் காவலர்களில் ஒருவர் கூட அவருக்கு அருகில் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இந்த விடயத்திலும் பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெலிகம பிரதேச சபை தவிசாளரின் கொலை தொடர்பாக, பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய மேற்பார்வையிட்டுள்ளார். தென் மாகாணத்துக்குப் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் வழிகாட்டுதலின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.