பேர்ள் கப்பலில் இருந்து மாயமான பெருந்தொகை பிளாஸ்டிக் துகள்கள்! தடயம் ஏதும் இல்லை
இலங்கை கடலில் எரிந்து மூழ்கிய எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ள் சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் மைக்ரோ துகள்களில் 40% மட்டுமே கரையொதுங்கியுள்ளன. மீதமுள்ள 60 வீத பிளாஸ்டிக் மற்றும் துகள்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான தடயங்கள் எதுவும் இல்லை என்று இலங்கையின் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அமைச்சில் நடைபெற்ற முன்னேற்ற மறு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றபோது அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.
கப்பலில் இருந்து ஒரு பெரிய அளவு பிளாஸ்டிக் துகள்கள் இலங்கையின் கரைகளில் ஒதுங்கின. இதுவரை அவை அனைத்தும் வத்தளை பகுதியில் உள்ள 44 கொள்கலன்களில் சேமித்து வைத்திருக்கப்பட்டுள்ளன.
மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்த பொருட்களின் பட்டியல் படி. 190 க்கும் மேற்பட்ட பொருள் வகைகள் இருந்துள்ளன.
அவற்றில் பெரும்பாலானவை பிளாஸ்டிக் பொருட்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
கடற்கரையில் உள்ள குப்பைகள் குறித்த விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை. கப்பலின் 40% பிளாஸ்டிக் மட்டுமே கரைக்குச் சென்றன.
மீதமுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் நெருப்பால் அழிந்து போயிருக்கலாம் அல்லது கடல் உயிரினங்களால் விழுங்கப்பட்டிருக்கலாம் அல்லது மிதக்கும் பிளாஸ்டிக் துகள்கள் அலைகளுடன் மற்ற பகுதிகளுக்கு இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம்.
இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபையின் கருத்துப்படி, உலகப் பெருங்கடலுக்கு பெரிய அளவிலான பிளாஸ்டிக் கொட்டப்பட்டமை இதுவே முதல் முறை என்று அமைச்சர் அமரவீர தெரிவித்தார்.