மட்டக்களப்பில் விசேட முற்றுகை நடவடிக்கையில் மதுவரித் திணைக்களம் (Video)
மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுவரித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கைகளில் பெருமளவான கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும், கடந்த ஒரு மாத காலமாக முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் 16 கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டதாகவும் மதுவரித்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை, வாகரை, செங்கலடி, கிரான் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது போதைப்பொருள் விற்பனை மற்றும் உற்பத்தி ஆகியவை தொடர்பில் 94 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்கள அத்தியட்சகர் எஸ்.ரஞ்சன் கூறியுள்ளார்.
கடந்த ஒரு மாதத்தில் 16 கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த பொருட்களும் பெருமளவான கசிப்பும் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கசிப்பு விற்பனை செய்த 47 பேருக்கும், சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட
12 பேருக்கும் சட்டவிரோதமாக பியர் விற்பனை செய்த 11 பேருக்கும், சட்டவிரோதமாக கள் விற்பனை செய்த 04 பேருக்குமாக மொத்தம் 94 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.








