இந்திய மக்களின் மருத்துவ அன்பளிப்புகள் இலங்கை மக்களின் கைகளில்!
இந்திய மக்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட பெருந்தொகை மருந்துப் பொருட்கள் மற்றும் இதர மருத்துவப் பொருட்கள் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளன.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, கொழும்பில் வைத்து இலங்கையின் சுகாதார அமைச்சர் சன்ன ஜெயசுமணவிடம் இந்த மருத்துவப் பொருட்களை சம்பிரதாயபூர்வமாக கையளித்தார்.
இந்தியக் கடற்படைக் கப்பலான கரியால், இந்த மருத்துவப் பொருட்களை இலங்கைக்கு எடுத்து வந்ததாக இந்திய உயர் ஸ்தானிகரகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
பேராதனை போதனா வைத்தியசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த மருத்துவ பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மார்ச் 2022 இல் இலங்கைக்கு பயணம்; செய்த போது போதனா வைத்தியசாலையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடு;த்து குறித்த வைத்தியசாலைக்கு உதவுவது குறித்து ஆராயுமாறு இந்திய அமைச்சர் இந்திய தூதுவரிடம் தெரிவித்திருந்தார்
இதன் அடிப்படையிலேயே தற்போது மருந்துகள் எடுத்து வரப்பட்டுள்ளன.
இதேவேளை இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் இயங்கும் பல்வேறு மருத்துவ நிறுவனங்களின் குறிப்பிட்ட கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் மேலும் அதிகமான மருத்துப் பொருட்கள்; இந்தியாவில் இருந்து எடுத்து வரப்படவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்காக இந்தியா வழங்கியுள்ள 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வரியின் கீழ் மருத்துவப் பொருட்களுக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன



