இலங்கையின் கடற்பரப்பில் இயற்கை எரிவாயு: ஆய்வுகளில் தகவல்
இலங்கையின் கடல்சார் எல்லைக்குள் சுமார் 3 டிரில்லியன் கன அடி (3 TCF) இயற்கை எரிவாயு இருப்பு இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபையின் (PDASL) தலைவர் சாலிய விக்கிரமசூரிய இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் ஆட்புலக் கடல் மற்றும் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குட்பட்ட (EEZ) கடற்பரப்பிற்கு அடியில் பல பில்லியன் பீப்பாய் மசகு எண்ணெய் இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட நில அதிர்வு சார்பான தரவு சேகரிப்பு மற்றும் மாதிரி ஆய்வுகளின் (Basin Modelling) அடிப்படையிலேயே இந்த மதிப்பீடுகள் கணிக்கப்பட்டுள்ளன.
இது இலங்கையின் கடல்சார் வளங்கள் குறித்த புரிதலை மேம்படுத்தியுள்ளது. இந்த வளங்கள் கண்டறியப்பட்டாலும், வணிக ரீதியிலான அகழ்வுப் பணிகள் உடனடி எதிர்காலத்தில் தொடங்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.
முதலீட்டாளர்களை ஈர்ப்பது மற்றும் அகழ்வாராய்ச்சி உரிமங்களை வழங்குவது போன்ற நடைமுறைகள் இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன.
கடலோர அகழ்வாராய்ச்சியில் வெளிப்படைத்தன்மையை பேணவும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும் 2021 ஆம் ஆண்டின் பெட்ரோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச எரிசக்தி நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், பாரம்பரிய ஏல முறையிலிருந்து விலகி 'திறந்த உரிம முறை' (Open Licensing System) எனும் புதிய நடைமுறைக்கு அதிகாரிகள் மாறியுள்ளனர்.
இதன் கீழ், கடல் பகுதிகள் சிறிய தொகுதிகளாக (Blocks) பிரிக்கப்பட்டு ஆய்வுகளுக்கு வழங்கப்படவுள்ளன. தற்போது பல உலகளாவிய நிறுவனங்கள் இலங்கையின் கடல்சார் வளங்களை ஆய்வு செய்ய ஆர்வம் காட்டியுள்ளன.
இது பல தசாப்தங்களாக மந்த நிலையில் இருந்த இந்தத் துறையில் ஒரு புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.