சிங்களத் தாதியர்கள் நியமனத்தால் வடக்கு, கிழக்கில் மொழிப் பிரச்சினை : சிறீதரன் சுட்டிக்காட்டு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளில் பெருமளவிலான சிங்களவர்கள் தாதியர்களாக நியமிக்கப்படுவதால் மொழிப்பிரச்சினை ஏற்படுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட எம்.பி. சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள
வைத்தியசாலைகளுக்குத் தமிழ் தாதியர்களை நியமிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சுகாதார நெருக்கடிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,
"நாடு பொருளாதார பாதிப்பை எதிர்கொண்டுள்ள வேளை சகல துறைகளின் சேவைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. எரிபொருளின் விலையேற்றம் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் கொண்டுள்ளார்கள்.
எரிபொருள் வரிசையில் நின்ற பலர் உயிரிழந்துள்ளார்கள். நாட்டின் பொருளாதார நிலைமை மக்களின் சுகாதார நிலைமையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
மருந்து பொருட்கள் இல்லை
யாழ்ப்பாணத்தில் விசர் நாய்க் கடிக்கு மருந்து இன்மையால் சிறுவன் உயிரிழந்தார் என்று பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்ததை அவதானிக்க முடிந்தது. விசர் நாய்க் கடிக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்றவர்கள் தடுப்பூசி இல்லாத காரணத்தால் சிகிச்சையனிக்கப்படாமல் திருப்பியனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாத்திரமல்ல முழு நாட்டிலும் விசர் நாய்க் கடி மற்றும் பாம்புக் கடிக்கான தடுப்பூசிகளில் தட்டுப்பாடு காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இந்த நிலைமை தொடர்ந்தால் விசர் நாய்க் கடிக்கு உள்ளாகுபவர்கள் குரைக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.
தாதியர் நியமனம்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளில் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன. தாதியர் சேவை நியமனத்திலும் பாரிய குறைப்பாடுகள் காணப்படுகின்றன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளில் பெருமளவிலான சிங்களவர்கள் தாதியர்களாக நியமிக்கப்படுகின்றார்கள்.
இதனால் வடக்கு, கிழக்கு வைத்தியசாலைகளில் மொழிப் பிரச்சினை காணப்படுகின்றது. வடக்கு, கிழக்கு வைத்தியசாலைகளுக்குத் தமிழ்த் தாதியர்களை நியமிக்க வேண்டும்.
கிளிநொச்சியில் உள்ள வைத்தியசாலைகளில் மருத்துவர்களுக்கான தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது" என்றார்.
போதைப் பொருள் பாவனைக்கு திட்டமிட்டு அடிமையாக்கப்படும் வடக்கு, கிழக்கு தமிழ் இளைஞர்கள்: சிறிதரன் குற்றச்சாட்டு |