யாழ் ஸ்ரான்லி வீதியில் உள்ள மொழித்தவறு : முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
யாழ் ஸ்ரான்லி வீதியையும் பலாலி வீதியையும் இணைக்கும் சிராம்பியடி வீதியின் பெயர்ப்பலகை தொடர்பில் தமிழ் ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.
பலாலி வீதியுடன் இந்த வீதி இணையும் இடத்தில் சிறாம்பியடி வீதி என பெயர் பலகை உள்ளது.
அவ்வாறே ஸ்ரான்லி வீதியுடன் இந்த வீதி இணையும் இடத்திலும் பெயர்ப்பலகை உள்ளது.
இப்பகுதியில் இரு பக்கங்களிலும் ஒவ்வொன்றாக இரு பெயர்ப் பலகைகள் மூலம் வீதி அடையாளப்படுத்தப்படுகிறது.
ஆரிய குளம் சந்தியில் இருந்து வந்து இந்த வீதிக்கு திரும்பும் இடத்தில் உள்ள பெயர்பலகையில் சிராம்பியடி வீதி என எழுதப்பட்டுள்ளது.
அவ்வாறே ஸ்டான்லி வீதியை குறுக்கறுக்கும் புகையிரதப் பாதை உள்ள பக்கத்தில் இருந்து வந்து இந்த வீதிக்கு திரும்பும் இடத்தில் சிறாம்பியடி வீதி என எழுதப்பட்டுள்ளது.
ஆக மூன்று இடங்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ள வீதியின் பெயரைக் குறிக்கும் பெயர்ப் பலகைகளில் இரண்டு ஒரே மாதிரியாகவும் மற்றையது வேறொரு முறையிலும் இருப்பதை அவதானிக்கலாம்.
வேறுபாடு
சிராம்பியடி, சிறாம்பியடி என ரகரம் றகரம் வேறுபட்டு பெயர் எழுதப்படுதல் உச்சரிப்பும் தவறு ஆகும் என தமிழாசிரியர் இது தொடர்பில் குறிப்பிடுகின்றார்.
இது வழமையான விடயமாகும்.ரகரம் வருமிடத்து றகரம் இட்டு எழுதுவதும் உண்டு.ஆகவே அது தவறாகாது என்றுரைப்பவர்களும் உண்டு.
ஆயினும் ர, ற உச்சரிப்பு தமிழுக்கு முதன்மையானது என்பதும் ஒரு குறித்த பெயரே இரு எழுத்துக்களால் வேறுப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது என்பதும் இங்கே நோக்கத்தக்கது.
இந்த ர,ற அகிய இரு எழுத்துக்களும் வந்துள்ள இரு வேறுபட்ட சொற்களை ஸ்டான்லி வீதியுடன் இணையும் சந்தியில் இரு பக்கங்களிலும் காணலாம்.
ஈழத்தமிழர்கள் என்றால் யாழ்ப்பாணத்து மக்கள் என்று பாராட்டப்படும் ஒரு சூழலில் ஒரு வீதியின் உள்நுழைவு இடத்தில் அந்த வீதியின் பெயர் வேறுபட்ட இரு முறைகளில் எழுதப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
பொருத்தமற்ற பெயர் எழுதப்பட்டுள்ள பெயர்ப்பலகையினை அகற்றி விடுவதே பொருத்தமானதாக இருக்கும் என இது தொடர்பில் தமிழார்வலர்கள் தெரிவிப்பதும் குறிப்பிடத்தக்கது.
கண்காணிப்பு தேவை
யாழ் நகரின் வீதிகளில் உள்ள பெயர்ப்பலகைகள் யாழ் நகருக்குள் வரும் மக்களுக்கு இன்றி அமையாதவையாகும்.
இடங்களை அறிந்து கொள்ள வீதிகளை இனம் கண்டு பயணிக்க உதவும் இத்தகைய பெயர்ப்பலகைகளை மக்கள் அதிகம் பார்த்துச் செல்லும் சந்தர்பங்கள் ஏற்படுவதை கருத்தில் எடுக்க வேண்டும்.
அவற்றில் ஏற்படும் சிறிய தவறுகள் கூட யாழ்ப்பாணச் சமூகத்தின் மீதான மொழிப்பற்றுத் தொடர்பில் கேள்வி எழுப்பும் என்பதையும் இங்கே நோக்க வேண்டும்.
இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை பொறுப்பானவர்கள் கருத்தில் எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.மொழி மீது மதிப்பு மிக்க சமூகமாக தம்மை காட்டிக்கொள்ளும் சந்தர்பங்களில் இதுவும் ஒன்றாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |