ஆபத்தான சூழ்நிலையில் பல இடங்கள்! நீட்டிக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை
மழை வீழ்ச்சி குறைந்துள்ள நிலையில் மண்சரிவு எச்சரிக்கைகளை மேலும் நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் மூத்த புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாத இறுதி மற்றும் டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த மழை காரணமாக, பல இடங்கள் இன்னும் ஆபத்தான சூழ்நிலையில் இருப்பதாகவும், அதன்படி, பருவமழையுடன் லேசான மழை பெய்தாலும், ஆபத்தான சூழ்நிலை ஏற்படக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீட்டிப்பு
அதன்படி, பதுளை மாவட்டத்தில் உள்ள லுனுகல, மீகஹகிவுல, வெலிமட, கண்டகெட்டிய, ஹாலி எல, பதுளை, ஊவா பரணகம மற்றும் பசறை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு கட்டம் 01 இன் கீழ் வழங்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் மினிபே மற்றும் உடுதும்பர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு கட்டம் 01 இன் கீழ் வழங்கப்பட்ட எச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது.
இதேபோல், மாத்தளை மாவட்டத்தில் உள்ள வில்கமுவ, உக்குவெல, அம்பகக கோரளை, ரத்தோட்டை மற்றும் லக்கல, பல்லேகம பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை அறிவிப்பு நடைமுறையில் உள்ளது.
மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள்
தற்போது தொடரும் மழைப்பொழிவு மற்றும் ஆபத்தான இடங்களின் நிலைமைகளைப் பொறுத்து இந்த அறிவிப்புகள் எதிர்காலத்தில் மாறக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய மழையின் காரணமாக மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் உள்ள பல பகுதிகள் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, சுற்றியுள்ள சூழல் குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றது.