தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை துப்புரவு செய்வதை தடுக்கும் வன ஜீவராசிகள் திணைக்களம் - காணி உரிமையாளர்கள் கவலை
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கோயில் வயல் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை துப்புரவு செய்வதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் தடுத்து வருவதாகவும், அவற்றை சுவீகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கோயில் வயல் பகுதியில் அதாவது ஆனையிறவு வெற்றிலைக்கேணி பிரதான வீதியில் மேற்கு புறத்தில் உள்ள குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் தலைமுறை தலைமுறையாக பயிர்செய்கை மேற்கொண்டும் வசித்தும் வந்துள்ளனர்.
மக்கள் இடம்பெயர்வு
இவ்வாறான தனியார் காணிகளுக்கு ஆவணங்கள் கடந்த 1911ஆம் ஆண்டுகளிலும் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் கடந்த 1991ஆம் ஆண்டு ஆனையிறவில் இடம்பெற்ற யுத்தம் மற்றும் வெற்றிலைக்கேணியில் இருந்து ஆனையிறவை நோக்கி மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக இப்பகுதி மக்கள் முழுமையாக இடம்பெயர்ந்து தமது வாழ்வாதாரங்களை கைவிட்டு சென்றனர்.
கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைபெற்றதன் பின்னர் வெடி பொருள் ஆபத்தான பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டு 2020ஆம் ஆண்டு வரையும் வெடிப்பொருள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தற்போது குறித்த காணிகளை துப்புரவு செய்து மக்கள் குடியேறுவதற்கு அல்லது பயிர் செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் தடை ஏற்பட்டு வருகின்றது.
வழக்கு தாக்கல்
குறிப்பாக கடந்த 1911ஆம் ஆண்டும் அதற்கு முன்னருமான காணி ஆவணங்கள் கொண்ட பாதிரியார் தோட்டம், ஆலங்காட்டு பள்ளம், கருப்பங்காடு ஆகிய பெயர்களைக் கொண்ட தனியாருக்கு சொந்தமான தென்னை பயிர்ச்செய்கை காணிகளை வனஜீவராசிகள் திணைக்களம் கையகப்படுத்தும் நோக்கில் குறித்த காணி உரிமையாளர்களை அவர்களது காணிகளை துப்புரவு செய்யவிடாது தடுத்து வருவதுடன் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தும் வருகின்றனர்.
குறித்த காணிகளில் தொன்று தொட்டு ஐந்து தலைமுறைகளுக்கு மேல் வாழ்ந்தமைக்கான காணி ஆவணங்கள் தோட்டச் செய்கைகளுக்காக முண்ணைய காலங்களில் வெட்டப்பட்ட கிணறுகள், வீடுகள், கட்டடங்கள் குடியிருந்தமைக்கான ஆதாரங்கள் மற்றும் போரில் எஞ்சியுள்ள பனை தென்னை மா போன்ற பயன்தரும் மரங்கள் என்பன சாட்சியாக உள்ள போதும் இவ்வாறு வனஜீராசிகள் திணைக்களம் தனது காணிகளை துப்புரவு செய்யவிடாது தடைகளை ஏற்படுத்தி அவற்றை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தமது பூர்வீக காணிகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






