298 குடும்பங்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு
திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவெல பிரதேச செயலாளர் பிரிவில் இதுவரை காலமும் காணி அனுமதி பத்திரமின்றி வசிக்கும் 298 குடும்பங்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வு நேற்று கோமரங்கடவெல மத்திய மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமாகிய கபில நுவன் அத்துக்கோராள ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதியின் தலைமையில் அடம்பனை கிராமத்தில் நடைபெற்ற கிராமத்துடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளுள் பல நடைபெற்று வரும் வேளையில் இந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நீண்டகாலமாகத் தாம் வசிக்கும் காணி அனுமதிப்பத்திரம் இன்றி சிரமப்பட்டதாகவும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் எங்களுக்கென்ற காணியுரிமை என்று சொல்லக்கூடிய குறித்த காணி அனுமதிப்பத்திரத்தை வழங்கியமை குறித்துச் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதாக இதன்போது அனுமதி பத்திரத்தைப் பெற்ற பயனாளி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மக்களது நீண்டகால தேவைகளுள் ஒன்று இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. காணி அனுமதிப்பத்திரமின்றி வங்கிகளில் கூட தொழில் முயற்சியை ஆரம்பிப்பதற்கான கடனை பெற முடியாத நிலை உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். இனி அந்த பிரச்சினை கிடையாது.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இதற்கும் மேலதிகமாக மக்களது வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் இதன் பிரதிபலனாக மக்களது வருமானம் உயர்வடைந்து வாழ்க்கைத்தரம் மேம்படும் என்றும் இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்துள்ளார்.
கோவிட்டுக்கு மத்தியில் அரசாங்கம் மக்களுக்கு அவசியமான திட்டங்களை ஆரம்பித்து நடைமுறைப்படுத்தி வருகின்றது. கோமரங்கடவெல பிரதேசத்திற்கு பல அபிவிருத்தி திட்டங்கள் கிடைக்கப்பெற்றுச் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இப்பிரதேச மக்களின் தேவைகள் கட்டம் கட்டமாக நிறைவேற்றப்பட்டு வருவதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோரல தெரிவித்துள்ளார்.
இயற்கை எழில்மிகு பிரதேசத்தில் வாழக் கிடைக்கப்பெற்றமை எம்மனைவருக்கும் கிடைத்த பெரும் பாக்கியமாகும். வழங்கப்பட்ட காணி அனுமதிப்பத்திரம் தங்களுக்கு மிக முக்கியமானதாகும். குறித்த இடங்களில் சேதன முறையிலான விவசாயத்தை மேற்கொள்ளல் எம்மனைவரது கட்டாய தேவையாக உள்ளது. இதனை அனைவரும் ஏற்றுச் செயற்படல் வேண்டும். நாட்டு நலன் மற்றும் எதிர்கால பரம்பரையினரின் நலன் கருதி எடுக்கப்பட்ட தீர்மானமாகச் சேதன விவசாயம் காணப்படுவதாக இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் கோமரங்கடவெல மற்றும் மொரவெவ பிரதேச சபை தவிசாளர்கள், கோமரங்கடவெல பிரதேச செயலாளர் எஸ்.எம்.சி.சமரகோன்,சக உத்தியோகத்தர்கள், பயனாளிகளும் கலந்து கொண்டுள்ளனர்.










தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
