முல்லைத்தீவில் காணியற்றோருக்கு விரைவில் காணிகள் வழங்கப்பட வேண்டும் - ரவிகரன் எம்பி கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தில் 3,389 பேருக்கு குடியிருப்பதற்கு காணிகள் இல்லையென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதற்கு பதிலளித்த கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் காணிக்கச்சேரிகளை நடாத்தி காணியற்றோருக்கு காணிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று (24.11.2025) இடம்பெற்றது. குறித்த கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
காணிகளை வழங்க நடவடிக்கை
இந்நிலையில், இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 3,389 பேருக்கு காணிகள் இல்லை. எனவே காணி அற்றவர்களுக்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

குறிப்பாக புதுக்குடியிருப்பில் 1500 குடும்பங்களுக்கு காணிகள் இல்லை. இந்நிலையில் கூடிய விரைவில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காணியற்றோருக்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை மாந்தை கிழக்கு, துணுக்காய், ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் காணியற்றோருக்கு காணிகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தியிருந்தேன்.
அதற்கமைய துணுக்காய் மாந்தை, ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவுகளிலுள்ள காணியற்ற குடும்பங்களுக்கு காணிகளை வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை கரைதுறைப்பற்று பிரதேசத்திலும் 700இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணிகளின்றி இருப்பதாக பிரதேசசெயலகத் தரவுகளின் மூலம் அறியக்கூடியதாகவிருக்கின்றது.
காணியற்ற குடும்பங்கள்
எனவே காணிகளுக்காக விண்ணப்பித்துள்ள எமது மக்களுக்கு விரைவில் காணிகளை வழங்குவதற்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு காணிகளற்ற குடும்பங்களுக்கு காணிகளை வழங்கத்தவறினால், காணிகளற்ற மக்களுடன் இணைந்து பிரதேச செயலகங்களை முற்றுகையிட்டு போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
எனவே விரைவாக குடியிருப்பதற்கு காணிகள் இல்லாத குடும்பங்களுக்கு விரைவில் காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - என்றார்.
இந்நிலையில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் இதன்போது பதிலளிக்கையில், காணியற்ற குடும்பங்களுக்கு காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதற்கமைய அவ்வாறு காணியற்றோருக்கு வழங்கப்படவேண்டிய காணிகள் இனங்காணப்பட்டுள்ளதுடன், அக்காணிகள் அளவீடு செய்யப்பட்டு வழங்குவதற்கு ஏற்றவகையில் தயார்நிலையிலும் உள்ளன. எனவே காணியற்றவர்களுடைய பட்டியலை ஆராய்ந்து, எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் காணிக்கச்சேரி நடாத்தப்படும் எனத் தெரிவித்தார்.



